சென்னை, ஜனவரி 3: சென்னை – ராமேஸ்வரம் (Rameswaram) இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் (Vande Bharat) ரயில் சேவை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையின் தகவலின்படி, சென்னை – ராமேஸ்வரம் இடையிலான வந்தே பாரத் ரயில் 130 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து தொழில்நுட்ப பரிசோதனைகளையும் வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பொங்கலுக்கு முன்பாகவே இந்த ரயில் சேவை தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் பரிசாக தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கலை முன்னிட்டு சென்னை – ராமேஸ்வரம் ரயில் சேவை
வந்தே பாரத் ரயில்கள், இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வேகமான பயணம் மற்றும் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகள் ஆகிய காரணங்களால் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமான ராமேஸ்வரம் மற்றும் சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை குறித்த கோரிக்கைகளை மக்கள் நீண்ட காலமாக முன் வைத்து வந்தனர். இந்த நிலலையில் பயணிகளின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, கடந்த டிசம்பர், 2025 அன்று ரயில்வே வாரியம் இந்த வழித்தடத்திற்கு அனுமதி வழங்கியது.
இதையும் படிக்க : புதுச்சேரியில் புத்தாண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா…தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!




தற்காலிக கால அட்டவணைப்படி, இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். பின்னர் அந்த ரயில், ராமேஸ்வரத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 10 மணி 25 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் வந்49410தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டால், இந்த பயண நேரம் வெறும் 8 மணி நேரமாக குறையும். இதன் மூலம் பயணிகள் சுமார் 2 மணி 25 நிமிடங்கள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.
எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும்?
இந்த புதிய வந்தே பாரத் ரயில், வழியில் ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். ரயிலின் கட்டண விவரம் மற்றும் பெட்டிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள், ரயில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட பிறகே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை – கோயம்புத்தூர், சென்னை – நெல்லை, மதுரை – பெங்களூரு, நாகர்கோவில் – சென்னை எழும்பூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…ஈஸியா ஊருக்கு போகலாம்!
இந்த சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் மூலம், ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகள் மட்டுமின்றி. ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் ரயில் போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.