இதுவரை இல்லாத அளவு.. 2025 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோவில் 11.19 கோடி பேர் பயணம்..
Chennai Metro: சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட பத்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2025-ம் ஆண்டில் மட்டும் 11.19 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள். ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2018 வரை 2,80,52,357 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 3, 2025: 2025 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 11.19 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவான அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் தொடக்கத்தில் அறிமுகமான போது கட்டணம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட மக்கள் அதனை அதிக அளவில் பயன்படுத்தவில்லை. ஆனால் பின்னர், பல்வேறு சலுகைகள் மெட்ரோ ரயில் தரப்பில் அறிவிக்கப்பட்டன.
சென்னை மெட்ரோ ரயில் சேவை:
மேலும், அலுவலக நேரங்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாகச் செல்லவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து விரைவாகச் சென்றடையவும் முடிவதால், மக்கள் மெட்ரோ ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் சிறப்பு முகாம் – முழு விவரம் உள்ளே..
இன்றைய தினம் மெட்ரோ ரயில் சேவை சென்னைக்கு ஒரு இன்றியமையாத போக்குவரத்து சேவையாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடம் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2025 ஆம ஆண்டில் 11 கோடி பேர் பயணம்:
இந்தச் சூழலில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 11.19 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொதுமக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட பத்து ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு 2025 ஆம் ஆண்டில் மட்டும் 11.19 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொங்கல் சிறப்பு ரயில்.. சொந்த ஊர் செல்வபவர்கள் கவனத்திற்கு.. வெளியானது ஸ்பெஷல் அறிவிப்பு..
ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2018 வரை 2,80,52,357 பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 பயணிகளும், 2020–ம் ஆண்டில் 1,18,56,982 பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,87,765 பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 பயணிகளும், 2024-ம் ஆண்டில் 10,52,43,721 பயணிகளும்,
இந்நிலையில், கடந்த 2025-ம் ஆண்டில் 11,19,80,687 பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள். ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரை மொத்தம் 46,73,41,480 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.