சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் – இனி இந்த ஸ்டேஷனிலும் நின்று செல்லும் – விவரம் இதோ
Vande Bharat Update : சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இனி விருதாச்சலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய நிலையில் விருதாச்சலம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, டிசம்பர் 21: சென்னை – திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் (Vande Bharat) ரயில் தொடர்பாக பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக பயணிகள் முன்வைத்து வந்த கோரிக்கையை ஏற்று, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் இனி விருதாச்சலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருதாச்சலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது அம்மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் (Train) தொடர்பான விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
விருதாச்சலத்திலும் வந்தே பாரத்
சென்னை எக்மோரில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், தற்போது தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இந்த ரயில் சரியாக இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் விருதாச்சலத்திலும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் மற்றும் வணிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது ரயில்வே அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிக்க : “சென்னை புத்தக கண்காட்சி”.. ஜன.8ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!




2 மணி நேரம் சேமிப்பு
சென்னையிலிருந்து திருநெல்வேலி வரையிலான சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தை நிறைவு செய்ய, இதே வழித்தடத்தில் இயங்கும் பிற ரயில்கள் சராசரியாக 10 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் நிலையில், வந்தே பாரத் ரயில் சுமார் 8 மணி நேரத்தில் பயணத்தை நிறைவு செய்கிறது. இதனால் பயணிகளுக்கு 2 மணி நேரத்திற்கு மேலான நேரம் மிச்சமாகிறது. பயண நேரம் குறைவதால் இந்த வந்தே பாரத் ரயிலை மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த ரயில்களில் பயணிக்க டிக்கெட்டுகள் எளிதில் கிடைக்காத அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விருதாச்சலம் பகுதியில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிக்கும் மக்களின் வசதிக்காக இந்த புதிய நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் – திருச்சி இடையே முன்பு ஒரே ஒரு நிறுத்தம் மட்டுமே இருந்த நிலையில், இப்போது விருதாச்சலமும் சேர்க்கப்பட்டுள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொழில் மற்றும் வேலை சார்ந்து சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் வணிகர்கள் மற்றும் ஊழியர்கள் குறுகிய நேரத்தில் பயணிக்க முடியும் என்பதால், இந்த முடிவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிக்க : சென்னையில் 6% குறைவாக பதிவான வடகிழக்கு பருவமழை.. எங்கே அதிகம் தெரியுமா? – வெதர்மேன் டேட்டா..
வந்தே பாரத் ரயில்கள் முழுமையாக குளிர் சாதன வசதியுடன் இயங்குகின்றன. தானியங்கி கதவுகள், விசாலமான ஜன்னல்கள், வைஃபை வசதி, வசதியான இருக்கைகள், அடுத்து வரவிருக்கும் நிலையங்கள் குறித்து முன் அறிவிப்புகள் சிசிடிவி கேமராக்கள், பயோ கழிப்பறைகள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளதால் மக்கள் இதனை வரப்பிரசாதமாக கருதுகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் சென்னை – நாகர்கோவில், சென்னை – கோயம்புத்தூர், சென்னை – மைசூர், மதுரை – பெங்களூரு, சென்னை – விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் மொத்தம் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போது 164 வந்தே பாரத் ரயில்கள் சேவையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.