Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“சென்னை புத்தக கண்காட்சி”.. ஜன.8ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

49th Chennai Book Fair: புத்தகக் கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 25 லட்சம் வாசகர்கள் வருகை தர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

“சென்னை புத்தக கண்காட்சி”.. ஜன.8ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!
சென்னை புத்தக கண்காட்சி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Dec 2025 12:13 PM IST

சென்னை, டிசம்பர் 21: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்க உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புத்தகப் பிரியர்களும் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது இந்த சென்னை புத்தக கண்காட்சியைத்தான். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி, வரும் ஜனவரி 8, 2026 புத்தக கண்காட்சி தொடங்குகிறது. வழக்கம்போல சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில், இந்த கண்காட்சி ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை என 14 நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும், தள்ளுபடி விலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இந்த புத்தகக் கண்காட்சிக்காக புத்தக ஆர்வலர்கள் பலரும் ஆண்டு முழுவதும் காத்திருப்பது வழக்கம்.

இதையும் படிக்க : கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க தவெக திட்டம்… விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை!!

ஜன.8ல் புத்தக கண்காட்சி தொடக்கம்:

இந்நிலையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால், இணைச் செயலாளர் நந்தா, உதவி இணைச் செயலாளர் ஆடம் சாக்ரடீஸ் மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர், சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், வரும் ஜனவரி 8ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு 49வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைப்பதோடு, “கலைஞர் பொற்கிழி” விருதுகளையும் வழங்க உள்ளார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர் என்றனர்.

6 பேருக்கு பொற்கிழி விருது:

கலைஞர் பொற்கிழி விருது கவிதைக்காக கவிஞர் சுகுமாரன், சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யா, சிறந்த நாவலுக்காக இரா.முருகன், சிறந்த உரைநடைக்காக பேராசிரியர் பாரதி புத்திரன் (சா.பாலுசாமி), சிறந்த நாடகத்திற்காக கருணா பிரசாத், மொழிபெயர்ப்புக்காக வா.கீதா இவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க : அதிமுக இடத்தை குறி வைக்கும் தவெக…விஜய்யின் திட்டம் பலிக்குமா?பொய்க்குமா?

1000 அரங்குகள், அனுமதி இலவசம்?

புத்தகக் கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் 25 லட்சம் வாசகர்கள் வருகை தர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் நலன் கருதி இந்த முறை அனுமதி இலவசமாக வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, கண்காட்சியின் இறுதி நாளில், பபாசி சார்பில் வழங்கப்படும் இதர விருதுகளை உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.