“வேலியே பயிரை மேய்ந்தால்”.. சென்னையில் நூதன வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலீசார்.. திடுக் சம்பவம்!!
Three police officers Robbery: சென்னையில் இரவு நேரத்தில் போலீஸ்காரர்களும், திருநங்கைகளும் சேர்ந்து ரூ.22,000 பணத்தை சரவணனிடம் இருந்து அபகரித்து கொண்டனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் தன்னிடம் வழிப்பறி செய்த காவலர்கள் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை, ஜனவரி 03: ஹோட்டல் ஊழியரிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தது போல, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க வேண்டிய போலீசார், தாங்களே வழிப்பறியில் ஈடுபட்டால், அப்பாவி பொதுமக்கள் யாரிடம் சென்று முறையிடுவது? அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை நூங்கம்பாக்கத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னிடம் வழிப்பறி செய்தவர்கள் குறித்து புகார் அளிக்க போலீசாரிடம் சென்ற நபரிடம், நூதனமாக பேசி அவரது ஏடிஎம் கார்டுகளை மிரட்டி பறித்து அதில் இருந்த பணத்தை அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு நவீனங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்திலும் எந்த துணிச்சலில் போலீசார் இந்த தவறை செய்தார்கள் என்பது வியப்பான ஒன்றாக உள்ளது. தவறு செய்த காவலர்கள் எப்படி சிக்கினார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க : பைக்கில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம்…கியூ பிரிவு போலீசார் அலர்ட்…வேதாரண்யத்தில் பரபரப்பு சம்பவம்!
Gpay மூலம் வழிப்பறி செய்த திருநங்கைகள்:
புதுச்சேரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக பணிசெய்து வருகிறார். பட்டினப்பாக்கத்திலேயே தங்கியுள்ளார். இவர் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், சரவணன் கடந்த டிசம்பர் 25ந்தேதி அன்று இரவு அண்ணாநகருக்கு நுங்கம்பாக்கம் வழியாக தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது, நுங்கம்பாக்கம் பகுதியில் 3 திருநங்கைகள் அவரை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்த அவர்கள், அவரது செல்போனை பறித்து அதன் மூலம் Gpay வாயிலாக வங்கி கணக்கில் இருந்து ரூ.5,000 பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.




வழப்பறியில் ஈடுபட்ட போலீசார்:
இதனால், பாதிக்கப்பட்ட அந்த நபர், நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று சென்றுள்ளார். அப்போது, வழியிலேயே ரோந்து பணியில் இருந்த 2 காவலர்களை சந்தித்துள்ளார். உடனடியாக, அவர்களிடம் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கூறியுள்ளார். ஆனால் அவர்களோ, ‘உன் மீதுதான் சந்தேகம் உள்ளது. எங்களோடு வா’ என்று நுங்கம்பாக்கத்தில் உள்ள போலீஸ் பூத் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு இன்னொரு காவலரும் வந்துள்ளார்.
ஏடிஎம் மூலம் பணம் பறித்த போலீசார்:
தொடர்ந்து, 3 காவலர்களும் சேர்ந்து சரவணனின் ஏடிஎம் கார்டை பறித்து அதன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.15,000 பணத்தை ஏடிஎம் எந்திரம் மூலம் எடுத்துக் கொண்டனர். மொத்தமாக, அவரிடம் போலீஸ்காரர்களும், திருநங்கைகளும் சேர்ந்து ரூ.22 ஆயிரம் பணத்தை அபகரித்து கொண்டனர். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் தன்னிடம் வழிப்பறி செய்த காவலர்கள் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மோசடி குறித்து காவல் நிலையத்தில் புகார்:
அதோடு, வழிப்பறியில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த புகார் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு திருவல்லிக்கேணி துணை ஆணையருக்கு, காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில், நடந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் ஜெயசந்திரன் விசாரணை நடத்தினார். அதோடு, சம்பவம் நடந்த இடங்களில் இருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஹோட்டல் ஊழியர் சரவணனிடம் திருநங்கைகளும், 3 போலீஸ்காரர்களும் நூதன முறையில் பணம் பறித்தது உண்மை என்று தெரியவந்தது.
மேலும் படிக்க: மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் விஷம் கொடுத்த பெற்றோர்? விஏஓ மரணத்தில் எழுந்த சர்ச்சை
3 போலீசார் பணியிடை நீக்கம்:
இதையடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலீசார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழிப்பறி வழக்கில் சிக்கியது நுங்கம்பாக்கம் சட்டம் – ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் காஜா முகைதீன், ரத்தினம், விக்னேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, 3 போலீஸ்காரர்கள் மீதும், திருநங்கைகள் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.