2026 New Year Wishes: ஸ்டாலின் முதல் விஜய் வரை தலைவர்களின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
2026 New Year: சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே லேசான சாரல் மழை பொழிந்து, மக்களின் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர்.
சென்னை, ஜனவரி 1: 2026ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். சென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். அதேபோல், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தமிழக அரசியல் தலைவர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களின் வாழ்த்துச் செய்தியை காணலாம்.
இதையும் படிக்க: Happy New Year 2026: புத்தாண்டை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
ஏற்றமிகு ஆண்டாக அமையும் – முதல்வர் ஸ்டாலின்:
பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025-க்கு விடைகொடுத்து, இதுவரை காணாத மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026-ல் அடியெடுத்து வைக்கத் தயாராகிறோம்! தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகச் சிறந்த ஆண்டாக 2025 அமைந்தது என்றால் மிகையாகாது. நாம் இதுவரை பெற்ற வெற்றிகள் தந்த ஊக்கத்தோடும், போராட்டங்களால் பெற்ற துணிவோடும் 2026-ல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்! நாம் என்றால் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் பெறப்போகும் வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நிம்மதியான வாழ்க்கை மலரட்டும் – இபிஎஸ்:
“மலர்கின்ற இப்புத்தாண்டு, தமிழக மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் ஒளிரப் போகிறது – விஜய்:
“தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம். புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம். வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது. வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது. வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று இப்புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் ஒளிமிக்க புத்தாண்டு வாழ்த்துகள்” என்று அவர் கூறியுள்ளார்.
ஒளிமயமான எதிர்காலம் அமையும் – செல்வப்பெருந்தகை:
2026 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:`2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய் “போதையில்லா தமிழகம்”…பங்கமாய் கலாய்த்த தமிழிசை!
குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும் – டிடிவி தினகரன்:
“மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தொடக்கத்தோடு புத்துணர்வையும் அளிக்கும் இப்புத்தாண்டு, நம் அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியையும், குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும் எனக்கூக்கூறி, எனது ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.