மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் விஷம் கொடுத்த பெற்றோர்? விஏஓ மரணத்தில் எழுந்த சர்ச்சை
Honour Killing Allegation: திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் விஏஓ ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக காவலர் புகார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர், ஜனவரி 1: திருவள்ளூர் (Tiruvallur) மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த விஏஓ அருணா. 27 வயதாகும் இவர் பொன்னேரி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பயணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது மரணம் தொடர்பான வழக்கில், தற்போது பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட இந்த சம்பவத்தில், அருணாவின் காதலர், அவர் தற்கொலை செய்யவில்லை என்றும், பெற்றோர்களே விஷம் கொடுத்து கொலை செய்ததாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணா, பொன்னேரி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29, 2025 அன்று, குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த நிலையில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 1, 2026 அன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பாலைவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!




மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் விஏஓக்கு விஷம் வைத்ததாக குற்றச்சாட்டு
இந்த நிலையில், அருணாவுடன் பணியாற்றி வந்த விஏஓ சிவபாரதி என்பவர், திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விஏஓவாக பணியாற்றி வருவதாகவும், தானும் அருணா ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், அருணாவின் குடும்பத்தினர் தங்களின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் தன்னை அவரது தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
மேலும், அருணாவையும் தன்னையும் குடும்பத்தினர் மிரட்டி, காதலை கைவிடுமாறு கட்டாயப்படுத்தி வந்த நிலையில், அதற்கு சம்மதிக்காததால் இறுதியில் அருணாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாகவும் சிவபாரதி குற்றம்சாட்டியுள்ளார். இதனால், இதுவரை தற்கொலை வழக்காக கருதப்பட்டு வந்த அருணாவின் மரணம், கொலை சம்பவமாக மாறியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்குவது உறுதி?கசிந்தது முக்கிய தகவல்!
அரசு பொறுப்பில் உள்ள பெண் விஏஓக்கே இந்த நிலைமையா என அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாவின் மரணத்தில் உண்மையில் என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதில் காண, போலீசார் மருத்துவ அறிக்கைகள், சாட்சியங்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.