Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பைக்கில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம்…கியூ பிரிவு போலீசார் அலர்ட்…வேதாரண்யத்தில் பரபரப்பு சம்பவம்!

Smuggled Gold Seized Vedaranyam: நாகை மாவட்டத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதாக ரூ. 8 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடந்து வருகிறது.

பைக்கில் ரூ.8 கோடி கடத்தல் தங்கம்…கியூ பிரிவு போலீசார் அலர்ட்…வேதாரண்யத்தில் பரபரப்பு சம்பவம்!
வேதாரண்யத்தில் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 02 Jan 2026 10:57 AM IST

இலங்கையில் இருந்து படகு மூலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடல் பகுதிக்கு தங்கம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு (உள்நாட்டு காவல் நுண்ணறிவுப் பிரிவு) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகம் அளிக்கும் வகையில் வந்த பைக்கை போலீசார் பின் தொடர்ந்து சென்றனர். அந்த பைக் விழுந்தமாவடி கிராமம் அருகே சென்ற போது, பைக்கை ஓட்டி வந்த நபரை போலீசார் வழி மறைத்தனர். அவரிடம் மேற்கொண்ட சோதனையில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை தோப்புத் துறையில் உள்ள சுங்கத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை

அவரிடம், சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர் கொண்டு வந்தது கடத்தல் தங்கம் என்றும், அதன் மதிப்பு ரூ. 8 கோடி என்பதும் தெரிய வந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் நாகப்பட்டினம் மாவட்டம், நெல்லுகடை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காத்தான் மகன் சிவக்குமார் என்பதும், இவருக்கு கடந்த 2017- ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் படிக்க: 20 நாட்களாக உணவின்றி கைவிடப்பட்ட நாய்கள்… பரிதாபமாக மரணம்… திருநெல்வேலி அருகே சோகம்

சிறையில் அடைக்கப்பட்ட நபர்

இது குறித்து, தோப்புத்துறை சுங்கத்துறை அதிகாரிகள் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தனிப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு தங்கம், பீடி இலை, கஞ்சா, சிகரெட், அம்பர்கிரீஸ் உள்ளிட்ட பொருட்கள் அவ்வப்போது மர்ம நபர்கள் கடத்தி வருகின்றனர்.

தமிழகம்-இலங்கை இடையே தொடரும் கடத்தல்

இதே போல, தமிழகத்தில் இருந்தும் இலங்கைக்கு இது போன்ற பொருட்கள் அவ்வப்போது கடத்தப்படுகின்றன. இதனை கடலோர பாதுகாப்பு படை, இலங்கை கடற்படை அல்லது இந்திய கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் தடுத்து வருகின்றனர். இந்த கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணை வளையம் விரிவாக்கம்

இந்த நிலையில், இலங்கையில் இருந்து சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாகை மாவட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணையும் விரிவாக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: மாற்று சாதி இளைஞரை காதலித்ததால் விஷம் கொடுத்த பெற்றோர்? விஏஓ மரணத்தில் எழுந்த சர்ச்சை