அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
Pongal Bonus Announced For Govt Employees : தமிழக அரசில் பணிபுரிந்து வரும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு மாநில அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. அதன்படி, இதற்காக ரூ.181.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது .
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பொங்கல் போனசை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024- 2025- ஆம் ஆண்டுக்கான சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு மிக ஊதியம் வழங்குவதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3000 மிகை ஊதியம் ஆகவும், சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஓய்வூதியர்களுக்கு ரூ. ஆயிரம் மிகை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
பொங்கல் போனசுக்காக ரூ.181.86 கோடி ஒதுக்கீடு
இதற்காக சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர் ஆகியோருக்கு பொங்கல் போனஸ் வழங்குவதற்காக ரூ. 181.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுப்பூதியம், காலமுறை ஊதியம் பெரும் பணியாளர்களுக்கு ரூ. ஆயிரம் மிகை ஊதியம் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு




சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு
ஒவ்வொரு ஆண்டும் சி மற்றும் டி பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்பட உள்ளது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான போனஸ் தொகை விரைவில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கடை நிலைப் பணியாளர்களான சி – டி பிரிவினர்
தமிழக அரசு பணிகளில் சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் கடைநிலை பணியாளர்களாகவும், குறைந்த சம்பளத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் போனஸ் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த பொங்கல் போனஸ் அறிவிப்பால் சுமார் 9.90 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். பழைய ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?