Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க புதிய நடைமுறை!

Fake Medicine Complaints Filed Using QR Code : தமிழகத்தில் அதிகரித்து வரும் போலி மருந்துகள் குறித்த விற்பனை மற்றும் பக்க விளைவுகள் குறித்து புகார் அளிப்பதற்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது .

தமிழகத்தில் போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க புதிய நடைமுறை!
Fake Medicines Complaints
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 24 Dec 2025 10:54 AM IST

தமிழகத்தில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த மருந்துகளை சாப்பிட்ட பொது மக்களில் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்த நிலையில், மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளில் ஏதேனும் போலி மருந்துகள் என சந்தேகிக்கப்பட்டால், அந்த மருந்துகள் குறித்து புகார் அளிப்பதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, போலி மருந்துகள் குறித்து மருந்தகங்களில் உள்ள கியூ ஆர் குறியீட்டில் புகார் அளிக்கும் நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த கியூ ஆர் குறியீடானது அனைத்து மருந்தகங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மருந்தகங்களில் கியூ ஆர் குறியீடு

அதன்படி, அனைத்து மருந்தகங்களில் பொதுமக்கள் வாங்கும் மருந்துகள் போலியாக இருந்தாலும், அந்த மருந்துகள் மூலம் ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் இந்த கியூ ஆர் குறியீடு மூலம் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட சுமார் 20 குழந்தைகள் கல்லீரல் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க: 6,100 கிலோ எடை.. சாதனை படைத்த பாகுபலி ராக்கெட்.. கவனிக்க வேண்டிய டாப் 5 பாய்ண்ட்ஸ்!

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து

இந்த இருமல் மருந்தானது காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த மருந்து தொழிற்சாலை பூட்டி “சீல்” வைக்கப்பட்டதுடன், அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது சொத்துக்கள் மற்றும் இந்த இருமல் மருந்துக்கு விளம்பரம் செய்த நபரின் சொத்துகளை அமலாக்கத்துறை அண்மையில் கைப்பற்றியது.

புதுச்சேரியில் செயல்பட்டு வந்த போலி மருந்து தொழிற்சாலை

இந்தச் சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே புதுச்சேரியில் சுமார் 5 இடங்களில் போலி மருந்து தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது மீண்டும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சாப்பிட்ட புதுச்சேரியைச் சேர்ந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

போலி மருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு

எனவே, இந்த மருந்துகளை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தான், போலி மருந்துகளை கட்டுப்படுத்துவதற்காகவும், அது குறித்த புகார் அளிப்பதற்காகவும் கியூ ஆர் குறியீடு முறையே தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெங்களூரு – கண்ணூருக்கு சிறப்பு ரயில்.. தமிழகம் வழியாக செல்கிறது.