தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. பனி மூட்டம் தொடரும்.. வானிலை நிலவரம்!!
Weather forecast: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை, டிசம்பர் 24: தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து வர வர தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்வதுடன், சென்னையிலும் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
இதையும் படிக்க : தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்.. ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
வானிலை மையம் ரிப்போர்ட்:
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது. இன்றும் தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.




27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:
மேலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 25 முதல் 27ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து, டிசம்பர் 25ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை. ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : திமுகவும்-அதிமுகவும் பங்காளிகள்…தவெக நிர்மல் குமார் அட்டாக்!
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று அதிகாலை வேளையில் லேசான பணிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.