ஹேப்பி நியூஸ்! பொங்கலை முன்னிட்டு இலவ வேட்டி சேலை எப்போது? அமைச்சர் மகிழ்ச்சியான தகவல்
Pongal Gift: இந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுகள் தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்துள்ளார்.
சென்னை, டிசம்பர் 23: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகள் மூலம் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுகள் தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள், வரும் ஜனவரி 6, 2025 தேதிக்குள் முழுமையாக விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இலவச வேட்டி சேலை எப்போது?
இதுகுறித்து அவர் பேசுகையில், பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்படும் வேஷ்டி மற்றும் சேலைகளுக்கான உற்பத்தி இலக்குகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மிக விரைவாக இந்த உற்பத்திப் பணிகள் முடிக்கப்பட்டது. திட்டமிட்டபடி டிசம்பர் 15, 2025 அன்று அனைத்து வேஷ்டி மற்றும் சேலைகளும் வருவாய் துறைக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அவை அந்தந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இந்த பொருட்கள் சென்றடைய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு ஜனவரி 6, 2025 விநியோகம் நிறைவு பெறும் என்றார்.
இதற்கிடையே, இந்த ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பண உதவியும் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் 5,000 ரூபாய் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்ட நிலையில், அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இலவச வேட்டி, சேலை விநியோகம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான கூடுதல் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த பொங்கல் பண்டிகை காலத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தொடர்ச்சியாக அறிவிப்புகள் கிடைக்க உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.