2026-இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி…காளைகளுடன் மல்லுகட்டிய காளையர்கள்!
2026 First Jallikattu Competition: 2026- ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக் கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் காளைகளை அடக்குவதற்கு உற்சாகமாக காளையர்கள் களத்தில் இறங்கி களமாடி வருகின்றனர். இந்த போட்டியில், 900 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் களமாடுகின்றனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டியாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது காலம் காலமாக தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கமாகும். 2026- ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிகட்டு போட்டியை தச்சங்குறிச்சியில் நடத்துவதற்கு தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, இந்த போட்டியானது புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இன்று சனிக்கிழமை ( டிசம்பர் 3) காலை தொடங்கியது. இந்தப் போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் முதல் காளையாக புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் காளை களம் இறக்கப்பட்டது.
போட்டியில் 900 காளைகள்-300 மாடுபிடி வீரர்கள்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியானது தச்சங்குறிச்சி புனித விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி விழாக்குழுவினர் சார்பில் நடத்தப்படுகிறது. முன்னதாக தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி அந்த கிராமத்தின் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அரசு கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வு செய்து அனுமதி வழங்கியது.
மேலும் படிக்க: பொங்கல் தினத்தில் சதுர்கிரஹி யோகம்.. 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்!




மருத்துவக் குழுவினர் சோதனை
போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதன் பின்னர், காளைகள் மற்றும் அவற்றை பிடிக்கும் மாடு பிடி வீரர்கள் ஆகியோருக்கு மருத்துவ குழு மூலம் முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அடையாள எண்கள் வழங்கப்பட்டன. பின்னர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
முன்னேற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு
இந்த முன்னேற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அண்மையில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, இன்று ஜல்லிக் கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள் மற்றும் மாடு பிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கார், பைக், கட்டில், பீரோ, ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
அதிக வாடிவாசல் உள்ள புதுக்கோட்டை மாவட்டம்
இதனால், மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக வாடி வாசலில் இறங்கி களமாடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அதிக வாடிவாசல் உள்ள மாவட்டமாகவும், அதிக அளவில் மாடுபிடி வீரர்கள் உள்ள மாவட்டமாகும் விளங்குவதால் இங்கு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
மேலும் படிக்க: போகி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் – ஆன்மிக பெரியவர்கள் சொல்வது என்ன?