பொங்கல் போனஸ்.. ஓய்வூதியம் பெறுவோர் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?.. யாருக்கு கிடையாது?
Pongal bonus for pensioners: ஓய்வூதியர்களில் யார் யாருக்கு போனஸ் தொகை வழங்கப்படும்? என்பதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகை, கடந்த 1ம் தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜனவரி 03: 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் போனசை தமிழக அரசு நேற்று முன்தினம் (ஜன.1) அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, தமிழக அரசு ஓய்வூதியர்கள் யார் யாருக்கு எவ்வளவு பொங்கல் போனஸ் கிடைக்கும்? என்பதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான பொங்கல் போனசை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 மிகை ஊதியம் ஆகவும், சி மற்றும் டி பிரிவை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஓய்வூதியர்களுக்கு ரூ.1,000 மிகை ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஓய்வூதியர்களில் யார் யாருக்கு போனஸ் தொகை வழங்கப்படும்? என்பதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இதையும் படிக்க: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு உறுதி.. எவ்வளவு கிடைக்க வாய்ப்பு?




யாருக்கெல்லாம் பொருந்தாது
உலாமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித்தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள்; தற்காலிக மிகை ஊதியம், சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்; ‘ஏ’, ‘பி’ பிரிவு பதவிகளிலிருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்தியப் பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த போனஸ் உத்தரவு பொருந்தாது.
இந்தப் பொங்கல் பரிசுத் தொகை, கடந்த 1ம் தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.
இதையும் படிக்க: ஹேப்பி நியூஸ்! பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி சேலை எப்போது? அமைச்சர் மகிழ்ச்சியான தகவல்
யாருக்கு கிடைக்கும்?
‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுவோர், மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் அதாவது 1-10-2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உட்பட அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் (அதாவது ஓய்வூதியதாரர்கள் எந்த பணியாளர் பிரிவில் ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது பணியிடையே மரணம் அடைந்திருந்தாலும்) அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும். தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.