ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் என்ன? பட்டியலை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
தெற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் எந்தெந்த ரயில் நிலையங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் எந்த நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது தொடர்பான முழுமையான பட்டியலை தாக்கல் செய்ய உள்ளதாக விசாரணையின் போது தெரிவித்தார்.
ஜூன் 9, 2026: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் எத்தனை ரயில் நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான பட்டியலை தாக்கல் செய்ய உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு பின்னணி என்ன?
தனது மனுவில், பல ரயில் நிலையங்களில் சாய்தள பாதை, லிப்ட், சக்கர நாற்காலி வசதி, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க: வெயிலில் இருந்து பிரேக்.. சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி ?
இதேபோல், பெரம்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஞானபாரதி என்பவரும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக நடைமேடைகளுக்கு செல்லும் வழிகளில் போதிய வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுவதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் என்ன?
இந்த இரண்டு வழக்குகளும் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தரமாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தெற்கு ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் எந்தெந்த ரயில் நிலையங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் எந்த நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது தொடர்பான முழுமையான பட்டியலை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: புதுவையில் 3 புதிய அமைச்சர்கள்.. இரவோடு இரவாக ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு..
மேலும், ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் கட்டப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல முக்கிய நிலையங்களில் கூடுதல் வசதிகள் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பட்டியலை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த வழக்கு மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளின் அணுகல் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.