சென்னையில் இனி மரங்களை வெட்டினால் அவ்ளோதான்…மாநகராட்சி போட்ட புது ரூல்ஸ்!
Chennai Trees Cutting Restrictions : சென்னையில் இனி மரங்கள் வெட்டுவதற்கும், மரக் கிளைகளை அகற்றுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையான மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதே போல, குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் உள்ள மரங்களை முழுமையாக அகற்றுவதற்கும், மர கிளைகளை அகற்றுவதற்கும், ஒரு இடத்தில் இருந்து மரத்தை பிடுங்கி மற்றொரு இடத்தில் நடுவதற்கும் அரசு மற்றும் தனியார் தனியார் நபர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை வனத்துறை பெற்று, அதனை மாவட்ட பசுமை குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த சேவையை பொது மக்கள் எளிதாக பயன்படுத்துதற்கும், இதில், ஏற்படும் காலதாமதத்தை குறைக்கவும், இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்காகவும் சென்னை மாநகராட்சி ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
அதன்படி, மரங்களை அகற்றுதல் மற்றும் மரக் கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக சென்னை மாநகராட்சியின் இணையதளமான (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலியில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல, அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் மாநகராட்சி இணையதளத்தில் உள்ள பசுமை குழு போர்ட்டலில் சென்று அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க: லேப்டாப்பில் கருணாநிதி-ஸ்டாலின் படம் நீக்கம்….மாணவர்களே கவனம்…எல்காட் நிறுவனம் எச்சரிக்கை!




அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் இருக்கும் மரங்களை உரிய அனுமதியின்றி எவரும் வெட்டினால், சம்பந்தப்பட்டவருக்கு ரூ. ஒரு லட்சம், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் விளம்பர பதாகைகளை பொருத்துதல், மரங்களை சுற்றி அலங்காரம் மின் விளக்குகளை பொருத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியிடம் முன் அனுமதி
எனவே, சென்னை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் இருக்கும் மரங்களை முழுமையாக அகற்றுவதற்கோ அல்லது அதன் கிளைகளை வெட்டுவதற்கோ, ஒரு மரத்தை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதோ என்றால் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து முறையான முன் அனுமதி பெற வேண்டும். அதன்படி, இந்த விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட இடத்தில் சென்னை மாநகராட்சியின் பூங்கா கண்காணிப்பாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பூங்கா மேற்பார்வையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
விண்ணப்ப செயல்பாடு குறித்து குறுஞ்செய்தி
இதற்கான ஆய்வறிக்கை பசுமை குழுவுக்கு அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் பசுமை குழுவின் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: “புல்லினங்கால்”..தமிழகத்தில் முதல் சர்வதேச பறவைகள் மையம்…எங்கு அமைகிறது தெரியுமா!