“புல்லினங்கால்”..தமிழகத்தில் முதல் சர்வதேச பறவைகள் மையம்…எங்கு அமைகிறது தெரியுமா!
International Bird Center: தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 25 கோடியில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பேணி காப்பதற்காகவும், பறவைகள், வன விலங்குகள் உள்ளிட்டவற்றை பேணுவதற்காகவும் வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், அவை தமிழகத்திலேயே தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வளர்வதற்காகவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் 17 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச பறவைகள் மையம் அமைப்பதற்காக தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ.25 கோடியில் அமைக்கப்படும் சர்வதேச பறவைகள் மையம்
இந்த பறவைகள் மையம் ரூ. 25 கோடியில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2023- ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் கிடந்து வந்தது. தற்போது, இந்த பணிகளை வனத்துறை தொடங்கிய மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவேலி பகுதியில் வலசை பறவைகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இதனால், இந்த இடத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்தது.
மேலும் படிக்க: லேப்டாப்பில் கருணாநிதி-ஸ்டாலின் படம் நீக்கம்….மாணவர்களே கவனம்…எல்காட் நிறுவனம் எச்சரிக்கை!




பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிக்கு டெண்டர்
அதன்படி, இந்த பறவைகள் மையம் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர்கள் விடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பறவைகள் மையத்தில் உள்ள பறவைகளின் செயல்பாடுகள், பறவைகளின் வாழ்விட தேவைகள், வலசை பாதைகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இது மட்டும் இன்றி இந்த சர்வதேச பறவைகள் மையத்தில் வலசை பறவைகள் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், பார்வையாளர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
20 நீர் நிலைகளுக்கு ராம்சார் தலமாக அங்கீகாரம்
தமிழகத்தில் வலசை பறவைகளுக்காக 20 நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர் நிலைகளை ராம் சார் தலமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பறவைகள் வந்து செல்லும் பகுதிகளில் சூழலியல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் ராம் சார் அங்கீகாரம் பெற்ற பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, விழுப்புரம் மாவட்டத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பறவைகள் சர்வதேச மையம் அமைக்கப்படும் பட்சத்தில், இங்கு, பறவைகளை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் படிக்க: இனி அரசு அலுவலங்களில் காத்திருக்க தேவையில்லை.. ‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தொடக்கம்..