பூட்டிய வீட்டில் மூவர் சடலம்.. ரத்த வெள்ளத்தில் மனைவி- மகன்.. தூக்கில் கணவன்.. மயிலாடுதுறையில் பரபரப்பு!
Mayiladuthurai 3 Bodies Recovered : மயிலாடுதுறை மாவட்டத்தில் பூட்டில் வீட்டில் இருந்து கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மனைவி மற்றும் மகன் சடலமும், தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப போலீசார் விசாரித்து வருகின்றனர் .
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அமைந்துள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஜலேந்திரன் ( 55 வயது) மீனவர். இவரது மனைவி மலர் செல்வி. தம்பதிக்கு அதிகுணன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை ஜலேந்திரனின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாகவும் பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மகன்- மனைவி- தூக்கில் கணவன்
இதில், மலர் செல்வி மற்றும் அவரது மகன் அதிகுணன் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அருகில் உள்ள அறையில் அவர்களது தந்தை ஜலேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு.. சென்னையில் திமுக பிரமுகர் அதிரடி கைது.. பரபரப்பில் கட்சியினர்!




தடய அறிவியல் நிபுணர்கள் தடயம் சேகரிப்பு
தொடர்ந்து, ஜலேந்திரன் வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அத்துடன், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இது தொடர்பாக ஜலேந்திரன் உறவினர்கள் சீர்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா?. என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி, மகனை கொன்று தந்தை தற்கொலையா
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கும் நிலையில், மகன் மற்றும் மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர். மீனவர் ஜலேந்திரன் எந்தவித காயமும் இன்றி தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்துள்ளார். இதனால், மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு ஜலேந்திரன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: இலங்கை தமிழர் முகாமில் விழுந்த இடி.. தூங்கிய தொழிலாளி பரிதாப பலி.. தூத்துக்குடியில் பெரும் சோகம்!