Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவினர் மீது தாக்குதல்.. கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் சிகிச்சை.. விஜய் கடும் கண்டனம்!!

TVK Vijay strongly condemns: தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தவெகவினர் மீது தாக்குதல்.. கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் சிகிச்சை.. விஜய் கடும் கண்டனம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Feb 2026 07:27 AM IST

சென்னை, பிப்ரவரி 11: கள ஆய்வில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பதாக தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள பாரிமுனை அங்கப்பபன் நாயக்கன் தெருவில் நேற்று, தவெகவை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 10 பேர் தவெக துண்டு அணிந்து தேர்தல் சர்வே எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த திமுக வட்ட செயலாளர் கவியரசு உள்ளிட்டோர் தவெகவினரை தடுத்ததாகவும் அப்போது, ஏற்பட்ட தகராறில் தவெகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!

கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் அனுமதி:

இதில், தவெகவினர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணி உட்பட 2 பேர் ஸ்டான்லி மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளானவர்களை பார்க்கச்சென்ற தவெக மாநில நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

கொலை வெறி தாக்குதல்:

அப்போது,”துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் எங்கள் நிர்வாகிகள் தேர்தல் பணிக்காக சென்றபோது சேகர்பாபு திட்டமிட்டு திமுக ரவுடிகளை ஏவி எங்கள் நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். ஆறு பேருக்கு மேல் இதில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இரண்டு பேர் ஐசியூவில் உள்ளனர். சேகர்பாபு எங்களது நிர்வாகிகளுக்கு எல்லா வழிகளிலும் தொந்தரவு கொடுத்து வருகிறார்” எனவும் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

விஜய் கடும் கண்டனம்:

இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பதிவில், சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

மேலும் படிக்க: மதுராந்தகம் மாநாட்டில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை…சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னுதாரணமா?

தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்:

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.