ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. முந்தைய திமுக அரசின் மனுவை வாபஸ் பெற்ற தவெக அரசு.. சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!
Armstrong murder case CBI probe: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தவெக அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 22: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறத் தவெக அரசு எடுத்த முடிவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஜூலை 5-ஆம் தேதி செம்பியத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துச் செம்பியம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பிரபல ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்ளிட்ட பலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு
சிபிஐ விசாரணை கோரிய குடும்பத்தினர்:
காவல் துறையினரின் விசாரணையில் திருப்தி அடையாத ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் புளஸ் ஆம்ஸ்ட்ராங், இக்கொலையில் பல அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். எனவே, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இருப்பினும், அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடையும் பெற்றது.
திமுக அரசின் மனுவை வாபஸ் பெற்ற தவெக அரசு:
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசு பொறுப்பேற்றது. கடந்த மே மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரணையைத் தொடர்வதா அல்லது மாநிலக் காவல் துறையே விசாரிப்பதா என்பது குறித்து புதிய தமிழக அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்திய தவெக அரசு, வழக்கைச் சிபிஐ தொடர்ந்து விசாரிப்பதே சரியானது என்ற முடிவிற்கு வந்தது. மேலும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் கருணாகரன் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்:
தமிழக அரசின் இந்த இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைச் சிபிஐ தொடர்ந்து விசாரிக்க அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும் படிக்க: ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கை நீட்டிய வயர்மேன்.. கம்பி எண்ண வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் அதிரடி நடவடிக்கை!
முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டிற்கு மாறாக, தவெக அரசு எடுத்த இந்த அதிரடி முடிவு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.