AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மழை, இடி, பலத்த காற்று… அடுத்த 7 நாட்களுக்கு வானிலை அலர்ட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2–3°C வரை அதிகமாக நீடிக்கலாம். மதுரை விமான நிலையத்தில் 40.4°C அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மழை, இடி, பலத்த காற்று… அடுத்த 7 நாட்களுக்கு வானிலை அலர்ட்!
மாதிரி புகைப்படம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Jul 2026 13:50 PM IST

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகியுள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் மாற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கமாக தமிழகம் முழுவதும் பரவலாக அல்லாமல், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மேகமூட்டம் அதிகரித்து, சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பதிவாகலாம்.

ஓரிரு இடங்களில் மழை; நீலகிரியில் அதிகபட்ச பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. அதில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகப் பகுதியில் அதிகபட்சமாக 9.6 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதே நேரத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. பரவலான மழை இல்லாவிட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் சில உள் மாவட்டங்களிலும் ஈரப்பதம் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

24 முதல் 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஜூலை 22 முதல் 24 வரை தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தின் சில பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை குறையாது; உள் மாவட்டங்களில் வெப்பம் நீடிக்கும்

மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், மாநிலம் முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது என்று கணிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை தொடரக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் 40.4 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. அதே சமயம் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சமவெளிப் பகுதிகளுக்கான குறைந்தபட்சமாக 22.6 டிகிரியும், கொடைக்கானலில் 11.4 டிகிரியும் பதிவாகியுள்ளது.

Also Read: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

சென்னையில் மாலை நேர மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேரங்களில் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்.

Follow Us