ரூ.50 லட்சம் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ராமநாதபுரம் சார்-பதிவாளர்.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை!
Ramanathapuram Sub Registrar Arrested: ராமநாதபுரத்தில் சொத்தை பதிவு செய்து தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சார் - பதிவாளர் ஒருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் வெள்ளிப்பட்டினம் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தனது பெயரில் உள்ள சொத்தை பதிவு செய்வதற்காக ஒரு நபர் சென்றுள்ளார். அவரிடம், சார் பதிவாளராக பணிபுரிந்து வரும் ராமநாதன் என்பவர் இந்த பணியை செய்து முடிப்பதற்காக ரூ.50 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர், மீண்டும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்த அந்த நபர் சார் பதிவாளர் ராமநாதனிடம் தனது சொத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார். அப்போதும், அந்த சார்- பதிவாளர் தனக்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் எனவும், அப்படி தந்தால் தான் உங்களது சொத்தை பதிவு செய்வேன் என்றும் கூறியதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்பு துறை காவல் நிலையத்தில் புகார்
இதனால், வேறு வழி இன்றி சார் பதிவாளர் ராமநாதனுக்கு அந்த நபர் லஞ்சம் கொடுப்பதற்கு முன் வந்தார். அதன் அடிப்படையில், ரூ.50 லட்சம் தர முடியாது என அந்த நபர் கூறியுள்ளார். அப்போது, முதல் கட்டமாக ரூ.25 லட்சம் தருமாறு சார் பதிவாளர் ராமநாதன் கூறியதாக தெரிகிறது. அதன்படி, அந்த தொகையை அந்த நபர் வழங்கியுள்ளார். பின்னர், கூடுதல் தொகை கேட்டு சார் பதிவாளர் ராமநாதன் வற்புறுத்தி உள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த அந்த நபர் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: குடும்ப சண்டையில் புகுந்த மாமியார்.. ஆத்திரத்தில் வெட்டி சாய்த்த மைத்துனர்.. தூத்துக்குடியில் பகீர்!




சார் – பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது
அந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவலர்கள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ. 3 லட்சத்தை அந்த நபர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர் அயூப்கானிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் இடைத்தரகர் அயூப்கானை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் சார் – பதிவாளர் ராமநாதனுக்கு லஞ்சம் பெற்றதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
லஞ்ச பணத்தை பறிமுதல் செய்த போலீசார்
இதைத் தொடர்ந்து, சார் பதிவாளர் ராமநாதன் மற்றும் இடைத்தரகர் அயூப்கான் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சீர்வரிசை வழங்குவதில் தகராறு.. மதுரையில் மருமகன் அடித்து கொலை.. தாய்மாமன் அதிரடி கைது!