அண்ணா பல்கலை.யில் மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் பரவல்.. 200 மாணவர்களுக்குத் தீவிர பரிசோதனை!
Dengue Fever Outbreak at Anna University: சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களிடையே பரவி வரும் காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சொந்த ஊர்களுக்குச் சென்று சிகிச்சை பெறப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, செப்.21: தமிழ்நாடு முழுவதும் பருவகால மாற்றங்கள் மற்றும் மழைக்கால நிலவரங்களால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல் மற்றும் டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும், காய்ச்சல் பாதிப்பு ஒரே இடத்தில் அதிகமாகக் கண்டறியப்படும் இடங்களைக் ‘கிளஸ்டர்’ பகுதிகளாகக் கண்டறிந்து, அங்குத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தச் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையே காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: உயிரைப் பறிக்கும் உண்ணி காய்ச்சல்: எச்சரிக்கும் மருத்துவர்கள்… தப்புவது எப்படி?
200 மாணவர்களுக்கு டெங்கு பரிசோதனை:
அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் சிலருக்கு அடுத்தடுத்து காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மருத்துவக் குழுவினர் நேரில் சென்று மாணவர்களுக்குத் தீவிர காய்ச்சல் மற்றும் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனை முடிவுகளில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
சொந்த ஊர்களுக்குச் சென்று சிகிச்சை:
காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, இரத்தத் தட்டணுக்கள் குறைந்துள்ள மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று உரிய மருத்துவச் சிகிச்சை பெற்று, முழுமையாகக் குணமடைந்த பின்னர் விடுதிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கி சிகிச்சை பெற விரும்பும் மாணவர்களுக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தேவையான மருத்துவ உதவிகளும் சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: டெங்குவை தடுக்க வந்தாச்சு க்யூடெங்கா தடுப்பூசி.. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது… எப்போது தெரியுமா?
தீவிரமடையும் கொசு ஒழிப்புப் பணிகள்:
ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி காய்ச்சல் பாதிப்பினால் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில், தற்போது டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலும் எழுந்துள்ளதால், சென்னை மாநகராட்சி சார்பில் பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதிப் பகுதிகளில் கொசு மருந்து தெளித்தல், கொசுப் புழுக்களை அழித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களிடையே காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து முகாம்களை அமைத்துக் கண்காணித்து வருகின்றனர்.