AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உயிரைப் பறிக்கும் உண்ணி காய்ச்சல்: எச்சரிக்கும் மருத்துவர்கள்… தப்புவது எப்படி?

Beware of Scrub Typhus: 'ஸ்க்ரப் டைபஸ்' எனப்படும் உண்ணி காய்ச்சல், காடுகள் மற்றும் புதர்களில் உள்ள நுண்ணிய உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால் பரவும் ஒரு பாக்டீரியா தொற்றுநோயாகும். கடுமையான காய்ச்சல், உடல் வலி மற்றும் பூச்சி கடித்த இடத்தில் கருப்பு நிறத் தழும்பு ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகளாக விளங்குகிறது. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருத்தல், உடல் முழுவதையும் மூடும் ஆடைகளை அணிதல் மற்றும் ஆரம்பத்திலேயே மருத்துவ சிகிச்சை பெறுதல் மூலம் இந்நோயிலிருந்து தப்பலாம்.

உயிரைப் பறிக்கும் உண்ணி காய்ச்சல்: எச்சரிக்கும் மருத்துவர்கள்… தப்புவது எப்படி?
உண்ணி காய்ச்சல்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 21 Sep 2026 10:10 AM IST

மருத்துவத் துறையில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ (Scrub Typhus) என்று குறிப்பிடப்படும் உண்ணி காய்ச்சல், ‘ஓரியன்டியா சுட்சுகாமுஷி’ எனும் பாக்டீரியா நுண்கிருமியால் தோன்றும் ஒரு தீவிரமான தொற்றுநோயாகும். காடுகள், புதர்கள் மற்றும் ஈரப்பதம் நிறைந்த புல்வெளிகளில் வாழும் ‘சிகர் மைட்’ என்ற நுண்ணிய உண்ணிப் பூச்சிகள் கடிப்பதன் மூலம் இந்தத் தொற்று மனித உடலுக்குள் ஊடுருவுகிறது. பாதிப்புக்குள்ளான நபருக்கு அதிக காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, தசை வலி, உடல் நடுக்கம் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவை முதன்மை அறிகுறிகளாக ஏற்படுகின்றன. குறிப்பாக, பூச்சி கடித்த தோல்பகுதியில் சிறிய அளவிலான கருப்பு நிறத் தழும்பு (Eschar) தோன்றுவது இந்நோயின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. வெளிப்புறம் செல்லும்போது உடல் முழுவதையும் மூடும் ஆடைகளை அணிவதும், வீடு திரும்பியவுடன் குளிப்பதும் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கும். அறிகுறிகள் தென்பட்ட உடனடியாக சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

நோய் பரவும் முறை

பொதுவாக எலிகள், அணில்கள் போன்ற காட்டு உயிரினங்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் உடலில் ஒட்டுண்ணியாக வாழும் உண்ணிகளே இந்நோயைப் பரப்பும் முக்கியக் காரணியாக விளங்குகின்றன. விவசாய நிலங்கள் மற்றும் புதர்கள் நிறைந்த பகுதியில் மனிதர்கள் நடமாடும்போது, இந்த உண்ணிகள் தோலில் ஒட்டிக்கொண்டு கடிப்பதால் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் நேரடியாகக் கலக்கின்றன. முன்னதாக கிராமப்புறங்கள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய இடங்களில் மட்டுமே அதிகம் காணப்பட்ட இந்த நோய், தற்காலத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடுகள் மற்றும் மழைக்காலச் சூழல் காரணமாக நகர்ப்புறப் பகுதிகளிலும் பரவலாகக் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: டெங்குவை தடுக்க வந்தாச்சு க்யூடெங்கா தடுப்பூசி.. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது… எப்போது தெரியுமா?

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு முறைகள்

இந்த நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றியுள்ள புதர்கள், தேவையற்ற செடிகள் மற்றும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். தோட்டங்கள், வயல்வெளிகள் அல்லது காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும்போது உடல் முழுவதையும் நன்கு மூடும் ஆடைகளை அணிவதோடு, பூச்சி விரட்டி திரவங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. வெளிப்புற வேலைகளை முடித்து வீட்டிற்குத் திரும்பியதும் சோப்பு போட்டு சுத்தமாகக் குளிப்பது கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தும்.

காய்ச்சல் அல்லது தோலில் கருப்புத் தழும்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us