அவர் எந்த சமூகம் என்றே தெரியாது – சர்ச்சைக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம்
Aadhav Arjuna Denies Caste-Based Claims : இந்து அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் அவர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
சென்னை, மே 22 : தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்எல்ஏகள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் மே 22, 2026 இன்று நடைபெற்ற நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னி அரசுவும், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் ஷாஜகானும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் வன்னி அரசுவுக்கு சமூக நீதித்துறை, ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுத்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மற்ற துறைகளுக்கும் அமைச்சர்கள் ஏற்கனவே பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் அவர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : ராயபுரம் காவல் ஆய்வாளர் மீது பாய்ந்த நடவடிக்கை.. சென்னை ஆணையர் எடுத்த அதிரடி ஆக்சன்!
சர்ச்சைக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம்
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்து அறநிலையத்துறைக்கு இந்த சமூகத்தில் இருந்து அமைச்சரை நியமித்துள்ளதாக எதிர்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கிறார்கள். ரமேஷை அமைச்சராக்கும் வரை அவர் என்ன சமூகம் என்றே எங்களுக்கு தெரியாது என்றார்.
மேலும் பேசிய அவர், அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை முதல்வர் விஜய் உருவாக்கியிருக்கிறார். இந்தியாவே பார்த்து பிரமிக்கக் கூடிய அமைச்சரவையை உருவாக்கியுள்ளார். அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் எங்களால் எளிதாக ஆட்சியமைத்திருக்க முடியும். மதசார்பற்ற கொள்கையில் ஆட்சி அமைக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக நின்றோம். கடந்த ஒரு வாரத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டதே தவெக அரசின் சாதனை. இந்த சட்டமன்ற தேர்தலில் பண பலம் தூக்கி எறியப்பட்டுள்ளது. சாதி, மத அரசியலை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். தலித் சகோதரர்கள் முக்கிய துறைகளில் இடம்பெற்றுள்ளனர். ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என கூறியபடி தற்போது நிறைவேற்றியுள்ளோம் என்றார்.
இதையும் படிக்க : சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான எம்பி பதவி.. ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிப்பு.. தவெகவின் வியூகம் என்ன?..
பின்னர் அவரிடம் சென்னையில் ஏற்படும் மின்வெட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இன்னொரு துறை பற்றி நான் பேசுவது மரபு ஆகாது. மின்சாரத்துறையில் நிறைய கடன் சுமை இருப்பதாகவும் நிலக்கரியில் உழல்கள் நடைபெற்றிருப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் சொல்லியிருக்கிறார். அவர் அதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். தினம் 18 மணி நேர்த்துக்கு மேலாக உழைத்து கொண்டிருக்கிறார். அந்தந்த அமைச்சர்கள் துறை சார்ந்து விளக்கம் தருவார்கள் என்றார்.

