விறகெடுக்க சென்ற சிறுவன்…மறைந்திருந்த நல்ல பாம்பு….தீவிர சிகிச்சையில் பிரிந்த உயிர்!
Kundrathur Boy Dies Snake Bite: குன்றத்தூரில் விறகு எடுக்க சென்ற 9 வயது சிறுவனை நல்ல பாம்பு கடித்தது. இதில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, குன்றத்தூர் அருகே உள்ள நத்தம் பகுதியை சேர்ந்தவர் வையாபுரி. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் அபிஷேக் ( வயது 9) என்ற மகன் ஆகியோர் உள்ளனர். அபிஷேக் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அபிஷேக்கின் தாய் தண்ணீர் சூடு செய்வதற்காக விறகுகளை எடுத்து வருமாறு அபிஷேக்கிடம் கூறியுள்ளார். அதன்படி, அவர் விறகுகளை எடுப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது, விறகுகளை எடுத்துக் கொண்டிருந்த சிறுவனின் கையில் ஏதோ கடித்ததாக உணர்ந்துள்ளார். உடனே வலியால் சிறுவன் அலறி துடித்துள்ளார். உடனே பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து விறகுகளை எடுத்து பார்த்த போது, அபிஷேக்கை நல்ல பாம்பு கடித்தது தெரியவந்தது. உடனே, பாம்பை உறவினர்கள் அடிக்க முயன்றனர். ஆனால், பாம்பு தப்பி சென்று விட்டது.
தீவிர சிகிச்சையில் பிரிந்த சிறுவனின் உயிர்
பின்னர், அபிஷேக்கை அவரது பெற்றோர் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், பாம்பின் விஷம் ரத்தத்தில் அதிகமாக கலந்ததால் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அபிஷேக், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: தஞ்சை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றிய நர்ஸ்.. பாய்ந்த நடவடிக்கை!




குன்றத்தூர் போலீசார் விசாரணை
மேலும், உயிரிழந்த அபிஷேக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அபிஷேக்கின் தந்தை வையாபுரி அளித்த புகாரின்பேரில், குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அவ்வப்போது பாம்பு கடியால் உயிரிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீடுகளிலும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் தேவையில்லாத பொருட்கள் குவிந்து கிடப்பதால் அதில் பாம்புகள் தஞ்சம் புகுந்து விடுகின்றன.
குன்றத்தூர் பகுதியில் பெரும் சோகம்
இது தெரியாமல் நாம் அந்த பொருட்களை எடுக்கும்போது, பாம்பு கடிக்கு உள்ளாகிறோம். மேலும், பாம்பு கடி ஏற்பட்டவுடன், அதற்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தெரியாத காரணத்தால் உயிரிழப்புகள் பெருமளவில் நிகழ்கின்றன. இதில், கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். தற்போது, குன்றத்தூரில் 9 வயது சிறுவன் பாம்பு கடித்தால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: குடும்ப பிரச்சனையில் விபரீதம்.. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி, தாயும் தற்கொலை செய்துகொண்ட துயரம்..