தமிழகத்தில் நாய்க்கடியால் 6.50 லட்சம் பேர் பாதிப்பு.. 33 பேர் உயிரிழப்பு.. ஷாக் தகவல்!!
dog bites: கடந்த 2 வருடங்களில் மட்டும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. நாய்க்கடித்தால், மருத்துவமனைக்கு சென்று கட்டாயம் தடுப்பூசி எடுக்க வேண்டும். அதோடு, ஒருமுறை தடுப்பூசி போடுவதோடு நிறுத்தாமல் மருத்துவர் அறிவுரைப்படி, அனைத்து தவணை தடுப்பூசியையும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் மட்டும், நாய்க்கடியால் 6.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 33 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இது கடந்தாண்டை விட பாதிப்பு அதிகரித்தாலும், விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்பு குறைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. இதனிடையே, மாநிலம் முழுவதும் சுமார் 25 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதனால், நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் நாய்க்கடி மற்றும் அதன் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதோடு, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம் – பட்டாசுகள் வெடிக்க தடை… என்னென்ன கட்டுப்பாடுகள்?
ரேபிஸ் உருவானால் உயிரை காப்பது கடினம்:
அதேசமயம், கடந்தாண்டு நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 43 பேர் உயிரிழந்த நிலையில், இந்தாண்டு பாதிப்பு எண்ணிக்கை 1.70 லட்சம் அதிகரித்துள்ளது. எனினும், நாய்க்கடி பாதித்த அனைவரையும் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாய்க்கடி ஏற்பட்டால், உடனே தடுப்பூசி போடுவது அவசியம். அரசு மருத்துவமனைகளில் முதல் நாள், 3வது நாள், 7வது நாள் மற்றும் 21வது நாள் என நான்கு தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முறையை பின்பற்றினால் ரேபிஸ் நோயை முற்றிலும் தவிர்க்க முடியும். ஒருமுறை ரேபிஸ் உருவானால் உயிரை காப்பது கடினம் என்பதால் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.




ஆண்டுவாரியாக பாதிப்பு:
2023ஆம் ஆண்டில் நாய்க்கடியால் மொத்தம் 4.40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 2024ஆம் ஆண்டில் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், 2025 நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த 2 வருடங்களில் மட்டும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
மக்களுக்கான முக்கிய அறிவுரை:
நாய், பூனை, காட்டு விலங்கு கடித்தால் உடனே காயத்தை சுத்தமாக கழுவ வேண்டும். அதேநாளில், மருத்துவமனைக்கு சென்று கட்டாயம் தடுப்பூசி எடுக்க வேண்டும். அதோடு, நிறுத்தாமல் மருத்துவர் அறிவுரைப்படி, அனைத்து தவணை தடுப்பூசியையும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு விரைந்து சிகிச்சை எடுத்தால் ரேபிஸ் நோயைத் தடுக்கலாம் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ்பாஸ் – தமிழக அரசு புதிய சாதனை
ரேபிஸ் உயிரிழப்பு நேர்ந்த மாவட்டங்கள்:
2025ஆம் ஆண்டில் அதிக ரேபிஸ் உயிரிழப்புகள் ஏற்பட்ட மாவட்டங்கள் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 4 பேர், சேலம்- 4 பேர், கோவை – 3 பேர், கன்னியாகுமரி – 2 பேர் , மதுரை – 2 பேர் , ராணிப்பேட்டை – 2 பேர், சிவகங்கையில் – 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய சில மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.