கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வந்த ரவுடிக்கு நேர்ந்த கதி…பீர் பாட்டிலால் தாக்கி கொடூர கொலை!
Rowdy Attacked And Killed With Beer Bottle: தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த ரவுடி அவரது நண்பர்களால் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலை பகுதியில் உள்ள சத்யா நகர் உப்பளம் அருகே ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் திருமுருகன், உதவி ஆய்வாளர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அந்தப் பகுதியில் ஒரு ஆண் நபர் கொடூரமான முறையில் பீர் பாட்டிலால் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. பின்னர், அந்த நபரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் திருச்செந்தூர் டவுண் துணை காவல் கண்காணிப்பாளர் மதன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக, தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
16 வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடி
இதில், கொலை செய்யப்பட்டவர் சத்யா நகரை சேர்ந்த சீனு (வயது 26) என்பதும், இவர் ரவுடி என்பதும் தெரிய வந்தது. இவர் மீது, கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக, உள்ளூரில் இவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் வெளியூரில் வசித்து வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சீனு நேற்று வியாழக்கிழமை ( டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை




பீர் பாட்டிலால் தாக்கு கொடூரமான கொலை
அப்போது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக சீனு தனது நண்பர்களுடன் சேர்ந்து சத்யா நகர் உப்பளம் அருகே மது அருந்தி உள்ளார். அப்போது, அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த நண்பர்கள் பீர் பாட்டிலால் சீனுவை கொடூரமாக தாக்கி, முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வந்தவர் கொலை
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சீனுவின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இந்த கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஊருக்கு வந்த ரவுடி பீர் பாட்டிலால் கொடூரமான முறையில் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் – கார் மோதி பலி