சிவகாசி அருகே பயங்கரம்… இரு சிறுமிகளுக்கு எமனாக மாறிய வீட்டின் சுவர்…கதவில் விளையாடியது குற்றமா!
Two Girls Die After House Wall Collapses: விருதுநகர் மாவட்டத்தில் வீட்டின் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர், சிவகாசி நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் கமலிகா (வயது 9). இந்த நிலையில், கமலிகா மற்றும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜேஸ்வரியின் சகோதரியான தனலட்சுமி என்பவரின் மகள் ரிஷிகா (4) ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர். தற்போது, பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை என்பதால், இரு சிறுமிகளும் ராஜாமணியின் வீட்டின் வெளிப்புறம் உள்ள கேட்டில் இன்று சனிக்கிழமை காலை (டிசம்பர் 27) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கேட்டின் ஒரு பக்க சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
இதனை சற்றும் எதிர்பாராத, அந்த இரு சிறுமிகள் சுவற்றின் அடியில் சிக்கிக் கொண்டனர். இதில், வலி தாங்க முடியாமல் சத்தமிட்ட அந்த சிறுமிகளை அந்தப் பகுதியில் இருந்த பொது மக்கள் மீட்க முயன்றனர். ஆனால், சுவர் பாரமாக இருந்ததால் சிறுமிகளை மீட்பதில், சற்று சிரமம் ஏற்பட்டது. பின்னர்,சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த அந்த இரு சிறுமிகளும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: தஞ்சை டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்த இதயம்.. இறந்தும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்!!




பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்
அங்கு, அந்த சிறுமிகளுக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இரு சிறுமிகளும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த வீட்டில் சுவர் கட்டப்பட்டு 4 ஆண்டுகளே ஆன சுவர் இடிந்து விழுந்தது.
தரமற்ற முறையில் கட்டப்பட்டதா வீட்டின் சுவர்
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தரமற்ற முறையில் வீட்டின் வெளிப்புற சுவர் கட்டப்பட்டதா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் சிறுமிகளை இழந்த அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
மேலும் படிக்க: பானிபூரி வாங்கி தருவதாக 5 வயது சிறுவன் கடத்தல்.. பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. கோவையில் பரபரப்பு!!