பள்ளி மாணவியிடம் காதல் நாடகம்.. 15 பவுன் நகைகள் அபேஸ்.. சக மாணவர்கள் 2 பேர் கைது!!
Two students arrested; வேறு பள்ளிக்கு சென்றாலும், இருவரும் தொடர்ந்து பேசியும், காதலிலும் இருந்துள்ளனர். தொடர்ந்து, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மாணவன், மேலும் மாணவியின் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். சுதாரித்துகொண்ட மாணவி, மறுத்துள்ளார்.
திண்டுக்கல், டிசம்பர் 27: காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியிடம் இருந்து 15 நகைகளை சக வகுப்பு மாணவனே அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடகக் காதல் என்பது வெளியில் இனிமையும் அன்பும் நிரம்பியதாகத் தோன்றினாலும், அதன் உள்ளே ஏமாற்றமும் சுயநலமும் பதுங்கி இருக்கும் ஒரு போலி உணர்வே ஆகும். ஆரம்பத்தில் அன்பு, அக்கறை என்று மனதை கவர்ந்து, நம்பிக்கையை உருவாக்குவர். பிறகு அதையே பயன்படுத்தி பயமுறுத்தவும், கட்டுப்படுத்தவும் முயல்வது தான் இந்த உறவின் உண்மையான முகம். அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. அதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: தவெக பெண் நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பள்ளியில் அரங்கேறிய நாடக காதல்:
திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டு பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன், பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் படித்த மாணவியுடன் நட்பாக பழகி வந்த அவன், பின்னர் காதல் பெயரில் மாணவியிடம் இனிமையான வார்த்தைகளால் பேசிக் கொண்டு நம்பிக்கை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், மாணவியிடம் தனது பணத் தேவை இருப்பதாக கூறி தங்க நகைகளை கேட்டதாக தெரிகிறது. அதற்கு, காதலில் இருந்த அந்த மாணவியோ, தனது காதலனின் தேவைகளை பூர்த்தி செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், தான் அணிந்திருந்த கம்மல், மோதிரம், செயின் போன்ற நகைகளை ஒன்றன்பின் ஒன்றாக அந்த மாணவனுக்குக் கொடுத்து வந்துள்ளார்.




வீட்டில் இருந்து நகைகளை கேட்டு மிரட்டல்:
இதனிடையே, அம்மாணவியை திண்டுக்கல்லில் உள்ள மற்றொரு பள்ளிக்கு பெற்றோர் மாற்றியுள்ளனர். வேறு பள்ளிக்கு சென்றாலும், இருவரும் தொடர்ந்து பேசியும், காதலிலும் இருந்துள்ளனர். தொடர்ந்து, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மாணவன், மேலும் மாணவியின் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால், இந்த சமயம் சுதாரித்துகொண்ட மாணவி, தன்னால் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வர முடியாது என்று பிடிவாதமாக கூறியுள்ளார்.
15 பவுன் நகைகளை இழந்த மாணவி:
இதில், ஆத்திரமடைந்த மாணவன், “உன் பெற்றோரிடம் நமது காதல் விஷயத்தை சொல்லிவிடுவேன்” என மிரட்டி நகைகளை எடுத்துவரும்படி மிரட்டியுள்ளார். இதில், பயந்துபோன மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 15 பவுன் நகைகளை எடுத்துவந்து மாணவனிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், சில நாட்களில் வீட்டில் நகைகள் காணாமல் போனதை கண்ட பெற்றோர், கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பெற்றோரிடம் உண்மை உடைத்த மாணவி:
தொடர்ந்து, நகைகள் மாயமானது குறித்து மகளிடம் முதலில் விசாரித்துள்ளனர். அப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மாணவி நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். மொத்தமாக 15 பவுன் தங்க நகைகளை மாணவனுக்கு கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார். இதைக்கேட்ட பெற்றோர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
இதையும் படிக்க: வகுப்பறைக்குள் புகுந்த ஆசிரியைக்கு அடி, உதை.. முன்னாள் மாணவர் வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்!!
2 மாணவர்கள் கைது:
இதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், நகைகளை மிரட்டிப்பறித்த மாணவன் மற்றும் அவனுடன் இணைந்து செயல்பட்ட மற்றொரு மாணவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களே, சக மாணவியிடம் இதுபோன்று காதல் நாடகமாடி நகைகளை பறித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.