வடமாநில இளைஞர் மீதான தாக்குதல்.. “தமிழகத்திற்கே தலைகுனிவு” திருமாவளவன் கண்டனம்!
Brutual attack on a North Indian: இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றும் அவர் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர், டிசம்பர் 31: திருத்தணி அருகே வடமாநில புலம்பெயர் தொழிலாளர் ஒருவரை சிறுவர்கள் பட்டாக்கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் தனது சொந்த ஊருக்கே சென்ற நிலையில், திருமாவளவன் இச்சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, அதே திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்றைய தினம் வியாபாரி ஒருவர் மீது இரண்டு இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளிக்கு கத்தி வெட்டு…சரமாரி தாக்குதல்…4 சிறுவர்கள் கைது!
கொடூரமாகத் தாக்கிய சிறுவர்கள்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், வட மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர் மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பட்டாக்கத்தியுடன் அவரை மிரட்டி, நான்கு சிறுவர்கள் ரீல்ஸ் எடுத்தனர். இதற்கு சுராஜ் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறுவர்கள் ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரை திருத்தணி ரயில் நிறுத்தத்தில் ரயிலில் இருந்து இறக்கி, அப்பகுதியில் ஆளில்லா இடத்திற்கு அழைத்துச் சென்று பட்டாக்கத்தியால் கொடூரமாகத் தாக்கி, அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சுராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊருக்குச் செல்வதாக கையெழுத்திட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஏனெனில், தமிழக அரசே அவசர அவசமராகச் சுராஜை அனுப்பி வைத்ததாக விமர்சிக்கப்படுகிறது.
“தமிழகத்திற்கே தலைகுனிவு” திருமாவளவன் கண்டனம்:
ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை ‘ரீல்ஸ்’
என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை…— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 31, 2025
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், “ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை ‘ரீல்ஸ்’ என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அவலம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்க:
மேலும், “இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.