திருத்தணி ரயில் நிலையத்தில் மேலும் வன்முறைச் சம்பவம்.. வியாபாரி மீது கொடூரத் தாக்குதல்.. பரபரப்பு வீடியோ!!
Another violence incident at Thiruthani: சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களே இன்னும் ஆறாத நிலையில், மாநிலத்தின் மனசாட்சி மீண்டு வருவதற்கு முன்பே திருத்தணியில் நேற்று மற்றொரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் வியாபாரி, எந்தவித காரணமுமின்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர், டிசம்பர் 31: திருத்தணி ரயில் நிலையத்தில் ஜமால் என்ற வியாபாரி மீது எந்தவித காரணமுமின்றி ஒரு கும்பல் சராமாரியாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில இளைஞர் சுராஜ் மீதான தாக்குதல் நடந்த சில நாட்களில் அதே ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவும் காண்பாரை பதறச் செய்கிறது. தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்கள், அப்பகுதி மக்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் ஆயுதப் பயன்பாடு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளிக்கு கத்தி வெட்டு…சரமாரி தாக்குதல்…4 சிறுவர்கள் கைது!
வடமாநில இளைஞர் சுராஜ் மீது கொடூரத் தாக்குதல்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர் மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பட்டாக்கத்தியுடன் அவரை மிரட்டி, நான்கு சிறுவர்கள் ரீல்ஸ் எடுத்தனர். இதற்கு சுராஜ் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை திருத்தணி ரயில் நிறுத்தத்தில் ரயிலில் இருந்து இறக்கி, அப்பகுதியில் ஆளில்லா இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி, அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தன.
சொந்த ஊர் சென்ற சுராஜ்:
இதையடுத்து, போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சுராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊருக்குச் செல்வதாக கையெழுத்திட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜமால் என்ற வியாபாரி மீது தாக்குதல்:
இதனிடையே, பட்டுப்புடவை வியாபாரம் செய்யும் ஜமால் என்பவர் திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அவரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற பொதுமக்களையும் அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர், ரயில் நிலையத்திலிருந்து இழுத்துச் சென்று அவரைத் தாக்கிய நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் ஜமாலை மீட்டுள்ளனர்.
மேலும், அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அதே ரயில் நிலையத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுராஜ் காயமே இன்னும் ஆறவில்லை:
The wounds from the brutal attack on Suraj have not yet healed, and even before the conscience of the state could recover, Thiruttani witnessed yet another act of senseless violence yesterday. A local businessman, Jamal, was attacked by a group without provocation or cause.
This… pic.twitter.com/a2jRgW4oDA
— K.Annamalai (@annamalai_k) December 31, 2025
இச்சம்பவம் குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களே இன்னும் ஆறாத நிலையில், மாநிலத்தின் மனசாட்சி மீண்டு வருவதற்கு முன்பே திருத்தணியில் நேற்று மற்றொரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் வியாபாரி, எந்தவித காரணமுமின்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கவலைக்குரிய போக்கு:
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இது ஒரு கவலைக்குரிய போக்காக மாறியுள்ளது. சட்டமின்மை இயல்பாக்கப்பட்டு வருகிறது, குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், மற்றும் சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் கீழ், பொதுப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது என்று அவர் சாடியுள்ளார்.
இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
எத்தனை சுராஜ்களும், ஜமால்களும் பாதிக்கப்பட வேண்டும்?
சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தனது முழுமையான தோல்வியை திமுக ஒப்புக்கொள்வதற்கு முன்பு, இன்னும் எத்தனை சுராஜ்களும், ஜமால்களும் பாதிக்கப்பட வேண்டும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.