குடும்ப பிரச்சனையில் விபரீதம்.. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி, தாயும் தற்கொலை செய்துகொண்ட துயரம்..
A tragedy incident in theni: கணவனின் குடிபோதை பழக்கத்தால் 2 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு தேனி மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி இவ்வுலகில் வாழ்வதற்கு எதுவும் இல்லை என்ற முடிவு, தாயின் மனதை கள்ளாக மாற்ற, இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தேனி, ஜனவரி 07: கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண், 2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று, தானும் குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தண்டியகுளம் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான ஜெயபெருமாள் கூலி தொழிலாளி. அவரது மனைவி 30 வயதான தனலட்சுமி. இவர்களுக்கு தேவா (7), நீதி (2) என இரண்டு சிறு மகன்கள் இருந்தனர். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தவர்களின் தகவல்படி, ஜெயபெருமாள் பல ஆண்டுகளாக மதுபானத்திற்கு அடிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் வீட்டில் நிலவும் சூழல் மிகவும் பதட்டமாக இருந்தது.
இதையும் படிக்க: ‘என்னை நம்பி பல உசுரு வருது’.. கடமையை செய்த ரயில்வே கேட் ஊழியர்.. தஞ்சாவூரில் பரபர சம்பவம்!
வாழ முடியாது என்ற முடிவெடுத்த தனலட்சுமி:
இதனால் மன அழுத்தத்தில் இருந்த தனலட்சுமி, கணவர் வாழ்க்கை மாறாது என்ற நம்பிக்கையின்மை மற்றும் அடிக்கடி நிகழும் தகராறு காரணமாக மிகுந்த விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, கணவன் – மனைவி இடையே மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டது. பின்னர் ஜெயபெருமாள் தூங்கிவிட்டார்; ஆனால் தனலட்சுமி மனநிறைவு இன்றி அழுதுகொண்டே இரவும் முழுவதும் விழித்திருந்தார். இனி வாழ்வில் அமைதி எதுவும் கிடைக்காது என கருதி, தன்னுடன் குழந்தைகளையும் இவ்வுலகில் இருந்து செல்ல வேண்டும் என்ற பயங்கர முடிவுக்கு வந்தார்.
அதன்படி, அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மகன்களையும் தூக்கிக் கொண்டு வீடும் விட்டு வெளியே வந்தார். வீட்டிற்கு அருகிலிருந்த விவசாயக் கிணற்றை அடைந்து, மனதை கல்லாக்கி, குழந்தைகளைக் கிணற்றில் தள்ளினார். பின்னர் தானும் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மூன்று உடல்களும் மீட்பு:
அடுத்த காலை, அப்பகுதியில் சென்ற விவசாயிகள் கிணற்றின் அருகே ஒரு குழந்தையின் பால் பாட்டிலை கவனித்து சந்தேகம் கொண்டனர். உள்ளே பார்த்தபோது இரண்டு உடல்கள் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: “வேலியே பயிரை மேய்ந்தால்”.. சென்னையில் நூதன வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலீசார்.. திடுக் சம்பவம்!!
தீயணைப்பு படையினர் கிணற்றுக்குள் இறங்கி தனலட்சுமி மற்றும் மூத்த மகன் தேவாவின் உடலை வெளியே எடுத்தனர். அந்த கிணறு 30 அடி ஆழமுடையது; அதில் 25 அடி உயரம் தண்ணீர் நிரம்பியிருந்தது. சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு இளம் வயது குழந்தை நீதியின் உடலும் மீட்கப்பட்டது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)