‘என்னை நம்பி பல உசுரு வருது’.. கடமையை செய்த ரயில்வே கேட் ஊழியர்.. தஞ்சாவூரில் பரபர சம்பவம்!
Thanjavur Pinnavasal Railway Gate Keeper: தஞ்சாவூரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை திறக்க கோரி பெண் கேட் கீப்பரிடம், உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பின்னவாசல் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் இருந்த ரயில்வே ஊழியரிடம் ரயில்வே கேட்டை திறக்க கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரயில் வரக்கூடிய நேரம் என்பதால் அந்த பெண் கேட் கீப்பர் ரயில் கேட்டை மூடி உள்ளார். அப்போது, அந்த வழியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு பெண்ணை உறவினர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். அப்போது, ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், கேட்டை திறக்குமாறு உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், அந்தப் பெண் கேட் கீப்பர் ரயில் அருகே வந்து கொண்டிருப்பதால் நான் கேட்டை திறக்க முடியாது என்று கூறுகிறார். அப்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கும் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
ரயிலில் பயணிக்கும் பலரின் உயிர் கேள்விக்குறி
அப்போது, அந்தப் பெண் கேட் கீப்பர் உங்களுக்காக நான் ரயில்வே கேட்டை திறந்தால் ரயிலில் பயணிக்கும் பலரின் உயிர் கேள்விக் குறியாகும் என்று கூறுகிறார். மேலும், தனது இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட் கீப்பர் கூறுகிறார். ஆனால், அதை சற்றும் காதில் வாங்காத உறவினர்கள் அந்தப் பெண் கேட் கீப்பரை ஆபாசமாக திட்டியும், உயிரோடு எரித்து கொலை செய்து விடுவதாகவும் ஆண் ஒருவர் கொலை மிரட்டல் எடுத்து பேசுகிறார்.
மேலும் படிக்க: மதுப் பிரியர்களுக்கு முக்கியச் செய்தி… காலி மதுபாட்டிலை திரும்ப அளித்தால் பணம்!




ரயில்வே கேட்டை திறக்க முடியாது
பின்னர், நீண்ட நேரம் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மீண்டும் மீண்டும் அந்த பெண் கேட் கீப்பர் தனது இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்லுங்கள். நான் ரயில்வே கேட்டை திறக்க முடியாது என்று முடிவாக கூறினார். அதன் பின்னர், உறவினர்கள் ஒரு ஆபத்தான நிலையில் உள்ள பெண்ணை கேட்டின் வழியாக தூக்கிச் சென்று அந்த பெண் கேட் கீப்பரின் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
கேட் கீப்பரின் பைக்கில் மருத்துவமனைக்கு சென்ற உறவினர்
இவ்வளவு சம்பவங்களையும் அந்த பெண் கேட் கீப்பர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெண் கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை. இது தொடர்பாக ரயில்வே மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
மேலும் படிக்க: தடம் புரண்டு விபத்துக்குள்ளான முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!