மதுப் பிரியர்களுக்கு முக்கியச் செய்தி… காலி மதுபாட்டிலை திரும்ப அளித்தால் பணம்!
Empty Liquor Bottles: மதுக் கடைகளில் காலி மது பாட்டில்களை அளித்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டமானது இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் படி, பொது இடங்களில் மது பாட்டில்களை வீசி செல்வதை குறைப்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4,829 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில் உள்ள மதுவை அருந்தி விட்டு சாலை உள்ளிட்ட பொது இடங்களில் வீசி விட்டு செல்கின்றனர். இது, பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கால்நடைகளுக்கு பெருத்த இடையூறாக இருந்து வருகிறது. எனவே, காலி மது பாட்டில்களை பொது இடங்களில் வீசி செல்வதை தடுப்பதற்காக முக்கிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, காலி மது பாட்டில்களை மதுக்கடையில் அளித்து ரூ.10 பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும். இந்த திட்டமானது சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 6) தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மது பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு காலி மது பாட்டில்களை பொது இடங்களில் வீசி செல்வதை தடுப்பதற்காக, அவற்றை மதுக் கடைகளில் கொடுத்து, ரூ.10 அளிக்கும் திட்டம் சென்னை தெற்கு, வடக்கு, மத்திய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10
அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கும் போது அதன் உண்மை விலைக்கு கூடுதலாக ரூ.10 பெறப்படும். அதன் பின்னர், மதுவை அருந்தி விட்டு, காலி மது பாட்டிலை மீண்டும் மதுக் கடையில் கொடுத்து அந்த ரூ.10- ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மது பாட்டில்களை பொது இடங்களில் வீசி செல்வதை தடுப்பதும், அதனால் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பதும் ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்…மேல்முறையீட்டு மனு வழக்கில் இன்று தீர்ப்பு!




சென்னையில் டாஸ்மாக் நிர்வாக ரீதியாக
சென்னையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் அமைப்பு ரீதியாக சென்னை மத்திய மாவட்டம், வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் செயல்படும் மது கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வருத்தம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள்
ஆனால், தமிழகத்தில் மதுக் கடைகளை அடைத்தது போலவும் தெரியவில்லை. குறைத்தது போலவும் தெரியவில்லை. மேலும், மேலும், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மது கடைகளில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தற்போது, மதுக் கடைகளையும், மதுவையும் ஊக்குவிக்கும் வகையில், காலி மது பாட்டில்களுக்கு ரூ.10 திரும்ப பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: கடலோர தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!