நீலகிரியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி மரணம் – வனத்துறை அறிவிப்பு – காரணம் என்ன?
Nilgiris Tiger Death: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தோட்டப் பகுதியில் சுற்றித் திரிந்த காயம்பட்ட புலி ஜனவரி 5, 2026 அன்று உயிரிழந்ததாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்த புலி மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காயம்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நீலகிரி, ஜனவரி 5 : நீலகிரி (Nilgiris) மாவட்டத்தில் தேயிலைத் தோட்டப் பகுதியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த புலி (Tiger) ஜனவரி 5, 2026 அன்று உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கவலையையும், அதே நேரத்தில் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதியாக விளங்கும் நீலகிரி மாவட்டம், புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் இயற்கை வாழ்விடமாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது மனித குடியிருப்புகளுக்கு அருகே வருவது இப்பகுதிகளில் வழக்கமான ஒன்றாக உள்ளது.
காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி மரணம்
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் போர்த்தியடா பகுதியிலுள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில், காயங்களுடன் ஒரு புலி நடமாடும் காட்சிகள் வெளியாகின. இது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் வழியாக தினசரி பயணம் செய்ய வேண்டிய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் தொடரும் மிதமான மழை.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..




புலியின் நிலையை கண்காணிக்க தமிழ்நாடு வனத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட ட்ரோன் கேமராக்களின் மூலம், ஒவ்வொரு விநாடியும் புலியின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. மேலும், வனத்துறை மருத்துவக் குழுவும் புலியின் உடல்நிலையை நெருக்கமாக கவனித்து வந்தது. காயமடைந்த புலிக்கு உடனடியாக சிகிச்சை அளித்து, அதை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் தங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதாகவும், பாதுகாப்பு குறித்து கவலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த மூன்று நாட்களாக தேயிலைத் தோட்டத்தில் அசைவின்றி படுத்திருந்த அந்தப் புலி ஜனவரி 5, 2026 அன்று உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப கட்ட விசாரணை தகவல்களின் படி, அந்தப் புலி மற்றொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்திருக்கலாம் என்றும், அந்த காயங்களுடன் இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க : சோழர் கால ஊற்றுக் கெல்வெட்டு கண்டுபிடிப்பு.. திருவண்ணாமலையில் ஆச்சர்யம்!
புலியின் மரணம் குறித்து வனத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு துல்லியமான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலி இறந்த நிலையில், இனி பயமில்லாமல் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.