நான் தான் கடவுள்.. கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றி பிரச்சனை செய்த நபர்.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு..
Chidambaram Temple Issue: சிதம்பரம் நடராஜர் கோயிலில், மர்ம நபர் ஒருவர் சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்து, சுவாமி முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்தில் இருந்த பாலை தன் மீது ஊற்றிக் கொண்டு, “நான் தான் கடவுள்” என சத்தமிட்டு பேசியதாக கூறப்படுகிறது.
சிதம்பரம், ஜனவரி 4, 2026: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நேரத்தில், மர்ம நபர் ஒருவர் சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தின் கருவறைக்குள் நுழைந்து, சுவாமி முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்தில் இருந்த பாலை தன் மீது ஊற்றிக் கொண்டு, “நான் தான் கடவுள்” என சத்தமிட்டு பேசியதாக கூறப்படுகிறது.
தடுத்த தீட்சிதர் மற்றும் காவலாளி மீது தாக்குதல்:
இந்த அசாதாரண செயலைக் கண்ட அங்கிருந்த செல்வ கணேஷ் தீட்சிதர் மற்றும் கோவில் காவலாளியான கண்ணன் ஆகியோர், அந்த நபரை தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, அந்த மர்ம நபர் திடீரென கலசத்தை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார்.
மேலும் படிக்க: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்க பணம்?.. இன்று வெளியாகிறது அறிவிப்பு!!
இதில், தீட்சிதர் செல்வ கணேஷ் மற்றும் காவலாளி கண்ணன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு:
இதனிடையே, கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காரணமாக, சில நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த மர்ம நபர் அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, வளரகுறிச்சி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பது தெரியவந்தது.
மேலும் படிக்க: ஜன.9ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்.. 10,000 பேரிடம் 5 நாட்களில் நடக்கிறது..
மேலும் விசாரணையில், மணிகண்டன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல் நிலை பட்டதாரி படிப்பை முடித்தவர் என்றும், சமீப காலமாக வீட்டிலேயே இருந்து வந்ததாகவும், சிறிதளவு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை:
முதற்கட்ட விசாரணையில், மனநலம் பாதிப்பு காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கோவிலின் பாதுகாப்பு தொடர்பாகவும், வேறு யாரேனும் தூண்டுதல் இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மணிகண்டனின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர். மேலும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் முக்கிய நாளில் நிகழ்ந்ததால், கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.