ஜன.9ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் நேர்காணல்.. 10,000 பேரிடம் 5 நாட்களில் நடக்கிறது..
AIADMK candidate interview: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடன் நேர்காணல் ஜனவரி 9ம் தேதி முதல் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சென்னை, ஜனவரி 04: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வருகிற 9ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நேர்காணல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் – தமிழ்நாட்டை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை மாநிலம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து தேர்தல் தயாரிப்புகளை ஆய்வு செய்துள்ளார். மேலும், தேர்தல் அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கூட்டணி பேச்சுவார்த்தைகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதையும் படிக்க: “திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!
தேர்தலில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு:
அதேசமயம், அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணி முடிந்துள்ளது. அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதில், 2,000க்கும் மேற்பட்டோர் தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி களம் இறங்குமாறு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளர். இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் செய்வது தொடர்பாக அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




அதில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடன் நேர்காணல், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகையில் வருகிற 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6.15 மணி வரை நடைபெறும்.
மாவட்டங்களில் தொகுதி வாரியாக நேர்காணல்:
அதன்படி, 9ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. ஜன.10ம் தேதி கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் கிழக்கு, திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும், 11ம் தேதி விருதுநகர் மேற்கு, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடக்கிறது.
தொடர்ந்து, ஜன.12ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இறுதியாக ஜன.13ம் தேதி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலம், கேரளா மாநிலங்களுக்கும் நேர்காணல் நடக்கிறது.
இதையும் படிக்க : தமிழகத்தில் கூட்டணி மந்திரி சபை அமைய வாய்ப்பு….பிரேமலதா விஜயகாந்த்!
விருப்ப மனு அளித்தவர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைப்பு:
இந்த நேர்காணலில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்த தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் வருகை தந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.