“திமுக செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்”.. மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை!
Aiadmk district secretaries meet: தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால், மிக தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்றும், ஐடி விங் தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, டிசம்பர் 31: திமுக அரசு செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில், 82 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் அதிமுகவின் ஒரு வாக்கு கூட விடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ்பாஸ் – தமிழக அரசு புதிய சாதனை
பாஜவுடன் தொகுதி பங்கீடு:
அண்மையில் சென்னை வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி?
குறிப்பாக, பியூஷ் கோயல் உடனான பேச்சுவார்த்தையின் போது, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று பாஜக திட்டவட்டமாக கூறிய நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இதனால், இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில், அதிமுகவுக்கு கூட்டணியே இன்னும் உறுதி ஆகாத நிலை உள்ளதால், கூட்டணியை இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்:
அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த அந்தக் கூட்டத்தில், தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். அதோடு, மக்களை சந்திக்குமாறும், கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, திமுக அரசு செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறும், எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்குமாறும் கேட்டுகொண்டுள்ளார். அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
தீவிரமாக களப்பணி ஆற்ற அறிவுறுத்தல்:
மேலும், தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால், மிக தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஐடி விங் தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.