ஜன.6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.. ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய முடிவு?
Old pension scheme: குறிப்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஏதேனும் சாதகமான அறிவிப்பு வெளியாகுமா என்பதே அரசு ஊழியர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில், அன்றைய தினம் முதல் தான் ஜாக்டோ -ஜியோ காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னை, டிசம்பர் 31: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை (Cabinet) கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டம் 2026ம் ஆண்டின் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறுகிறது. இதில் வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகள், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் தயாரிப்பு போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்பதும், 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதால் அரசியல் மற்றும் வளர்ச்சி துறைகள் குறித்த முக்கியமான விவாதங்கள் நடைபெற உள்ளன என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : ஆங்கில புத்தாண்டுக்கு பொதுமக்கள் ஈஸியா ஊருக்கு செல்லலாம்…TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஜன.20ல் சட்டசபை கூட்டம்:
ஏற்கெனவே, ஜனவரி 20ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதோடு, அன்றைய தினமே அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த உரையை தமிழக அரசு தான் தயாரித்து வழங்கும். அதை அப்படியே ஆளுநர் வாசிப்பது மரபாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்:
ஆளுநர் உரையை தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், மற்றும் பிற விவாதங்கள் சுமார் மூன்று நாட்கள் வரை நடைபெறும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், வழக்கமான முழு நிதிநிலை அறிக்கைக்குப் பதிலாக, அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் (Interim Budget) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டசபையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய நிதிநிலை அறிக்கையை ஜூன் மாதம் முழுமையாக தாக்கல் செய்யும்.
தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு:
இந்த சூழலில் இடைக்கால பட்ஜெட் குறித்தும் ஜனவரி 6ல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் பெரிதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஆளும் திமுகஅரசு 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில்
12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பொங்கல் பரிசு ரொக்கம்… ரூ.3 ஆயிரமா அல்லது ரூ.4 ஆயிரமா? விரைவில் அறிவிப்பு!
ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு?
அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் அதே ஜனவரி 6-ஆம் தேதி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டக்களத்தில் இறங்கும் அதே நாளில் அமைச்சரவை கூடுவதால், அவர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஏதேனும் சாதகமான அறிவிப்பு வெளியாகுமா என்பதே அரசு ஊழியர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.