கன்னியாகுமரி கடல் பகுதியில் திடீர் பரபரப்பு..அலறியடுத்து ஓடிய சுற்றுலா பயணிகள்…என்ன காரணம்!
Kanyakumari Sea Was Suddenly Rough: கன்னியாகுமரியில் திடீரென கடல் கொந்தளிப்புடன், பலத்த சூறாவளிக் காற்று வீசியது. கடற்கரை பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறிஅடித்து ஓடினர். இதனால், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது. போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராம பகுதிகளில் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 5) திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதலே பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனிடையே, வழக்கம் போல கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை நடைபெற்று வந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு, கடல் பகுதியில் காற்று மெல்ல மெல்ல அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதனால், கடல் பயங்கர கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் மாறியது. இதன் காரணமாக கடல் பகுதியில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதனை சற்றும் எதிர்பாராமல் கடலின் அலைகளை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கடலில் குளிப்பதற்கு தடை விதித்த போலீசார்
இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், கால் நனைப்பதற்கும் போலீசார் தடை விதித்தனர். இதனை மீறி சில சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கினர். அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக, பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கடற்கரை பகுதி உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் இன்றி வெறிச் சோடியது.
மேலும் படிக்க: Viral Video: காரை இயக்கும் 4 வயது சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..




கடலில் பலத்த சூறாவளிக்க காற்று- கடல் கொந்தளிப்பு
கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை தொடர்ந்து, அந்தப் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா போலீசாரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வழக்கம் போல, விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 9 மணிக்கு படகு போக்குவரத்து சேவை தொடங்கியது. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் கடலில் சூறாவளி காற்று மற்றும் கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டதால் படகு போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டது.
ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப் பயணிகள்
இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் ஆகியவற்றை சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்காக சுற்றுலா பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தனர். பின்னர், ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றம் போல, ஆரோக்கியபுரம், கீழ மணக்குடி, சின்ன முட்டம், கோவளம், மணக்குடி உள்பட பல்வேறு கடற்கரையை ஓட்டி உள்ள கிராமப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் படிக்க: அழகழகான வெளிநாட்டு பறவைகள்… கலர்ஃபுல் தூத்துக்குடி!