மர்ம காய்ச்சலுக்கு பச்சிளம் குழந்தை பலி.. தூத்துக்குடியில் நிகழ்ந்த சோகம்.. பீதியில் பொது மக்கள்!
Thoothukudi Mysterious Fever Baby Died: தூத்துக்குடியில் மர்ம காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 6 மாத ஆண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செயத் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளை நயினார்புரம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கு சதீஸ்வரன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், குழந்தை சதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த காய்ச்சல் தொற்று குறைந்த பாடில்லை. இதனால், குழந்தையின் உடல்நிலை திடீரென கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தையை அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தத்தனர். அங்கு, குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால், குழந்தையின் உடல்நிலை மேலும் மேலும் மோசம் அடைய தொடங்கியது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இதனால், குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால், அச்சமடைந்த பெற்றோர், குழந்தையை தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை சதீஷ்வரன் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் நல பிரிவு மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் படிக்க: அமைச்சரிடம் தரிசனத்துக்கு லஞ்சம்: இருவர் பணி நீக்கம் – அர்ச்சகர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்!




சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குழந்தை
இருந்தாலும், சிகிச்சை பலன் இன்றி குழந்தை சதீஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக ஏரல் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை சிவகளை புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தையின் சடலம் உடல் கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. குழந்தைக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் எந்த வகை. தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தைக்கு காய்ச்சல் குறையாததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விவரம் உடனடியாக வெளியாகவில்லை. மேலும், இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை உடல்கூறாய்வு அறிக்கை
மேலும், குழந்தையின் சடலம் உடல் கூறாய்வு அறிக்கை வந்தவுடன் அதில் ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பாகவும், அதில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் அதன் தீவிரம் உள்ளிட்டவை குறித்த விவரம் வெளியாகும் என்று தெரிகிறது. திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் உடல் நலம் குன்றிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்துக்கு புதிய டிஜிபி நியமனம்.. டெல்லி டூ சென்னை… யார் இந்த மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்!