அமைச்சரிடம் தரிசனத்துக்கு லஞ்சம்: இருவர் பணி நீக்கம் – அர்ச்சகர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்!
Tiruchendur Murugan Temple Two People Suspend: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சரிடம் விஐபி தரிசனத்திற்கு பணம் பெற்ற விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவில் அர்ச்சகர் பணி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பிரபலமான சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விஜபி தரிசனம் மேற்கொள்வதற்காக அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பக்தர்களிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், அமைச்சர் இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் போல மாறுவேடத்தில் தரிசனத்திற்காக சென்றார். அப்போது, கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வரும் ஐயப்பன் என்பவர் அமைச்சர் என்று தெரியாமல் அவரிடம் விஐபி தரிசனம் மேற்கொள்வதற்கு ரூ.4000 தருமாறு கேட்டுள்ளார். அதன்படி, அமைச்சரும், அவருக்கு ஜிபே மூலமாக ரூ.4000- த்தை அனுப்பி உள்ளார். இதன் பின்னரே, அமைச்சர் என்பது அந்த அர்ச்சகருக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அர்ச்சகர் உள்ளிட்டோரிடம் அமைச்சர் ரமேஷ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
கோயில் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அர்ச்சகர் உள்ளிட்டோரிடம் விளக்க கடிதம் கேட்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரிடம் தரிசனத்துக்கு பணம் பெற்ற அர்ச்சகர் ஐயப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், மறு உத்தரவு வரும் வரை பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு உதவியாக இருந்த கோயில் காவலர்களான முன்னாள் ராணுவ வீரர்களான கருப்பசாமி மற்றும் தோப்பு ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல, கோவிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் பெற்றதாக மேலும் இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழக மக்களுக்கு தவெக அரசு கொடுத்த ஒரே பரிசு மின்வெட்டுதான்.. பொங்கிய தமிழிசை சௌந்தரராஜன்!





கோவில் பணியாளர் பணி நீக்கம்
4 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தரிசனத்திற்காக வருகை தரும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதில், சில பக்தர்களிடம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அர்ச்சகர்கள் மற்றும் காவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் கையூட்டு பெற்றுக் கொண்டு விரைவு தரிசன வரிசையில் அழைத்துச் சென்று முருகனை தரிசிக்க வைப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் தான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கோயில் அர்ச்சகர் சிக்கியது எப்படி
அதன் அடிப்படையில், அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் ரூ.100 கட்டண வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அர்ச்சகர் இடம் விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படியே, ரூ.4000 கொடுத்தால் விஐபி தரிசனத்தில் அழைத்து செல்வதாக அர்ச்சகர் கூறியதுடன், இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார்.
மேலும் படிக்க: திமுக கூட்டணி கட்சிகளால் தவெக ஆட்சியை மு.க.ஸ்டாலின் கவிழ்த்து விடுவாரா? மு.வீரபாண்டியன் கூறிய கருத்து!