காங்கிரஸில் வெடித்தது அடுத்த சர்ச்சை.. வேட்பாளர்கள் தேர்வில் பெரிய முறைகேடு.. ஜோதிமணி எம்.பி. அதிரடி குற்றச்சாட்டு!
Congress MP Jyothimani: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளதாக ஜோதிமணி எம்பி மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக அந்தக் கட்சியை சேர்ந்த கரூர் எம்பி- ஆன ஜோதிமணி மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதில், வேட்பாளர்கள் தேர்வு செய்த பின்னர் அதற்கு ஏற்றவாறு தொகுதிகள் கேட்டு பெறப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை தொடர்பாக சர்வே என்ற பெயரில் மிகப்பெரிய ஊழல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட காலம் பணியாற்றியவர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு புதிய நபர்கள், வெற்றி வாய்ப்பு இல்லாத பலருக்கு தொகுதிகள் கேட்டு பெறப்பட்டு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு எதன் அடிப்படையில் வாய்ப்பளிப்பு
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த சிலர் தேர்தல் முடிந்த பின்னர் சில நாட்களில் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர் அல்லது ஒதுங்கி விடுகின்றனர். இந்த மாதிரியான நபர்களுக்கு வாய்ப்பு வழங்கியது யார். எதன் அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விசாரணை நடத்தப்படாமல் தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளை மட்டும் விசாரிக்க குழு அமைப்பது தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடு ஆகும்.
மேலும் படிக்க: விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி, ஆனால்.. திராவிட கட்சிகளின் எதிர்காலம் என்ன?.. வைகோ பளீச்!




காங்கிரஸ் தலைமை முறையாக விசாரிக்க வேண்டும்
தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது. இந்த குழு மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி விதிமுறைகளின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும். இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் விசாரணை மேற்கொள்ள முடியாது. எனவே, காங்கிரஸ் கட்சி தன்னை சீரமைத்துக் கொள்ள விரும்பினால் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான விசாரணையை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதன்படி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கட்சி தொண்டர்களின் நம்பிக்கையே பெற முடியும். பல்வேறு மாநில தேர்தல்களில் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
கட்சியின் எதிர்காலத்துக்கு பின்னடைவு
இந்த குற்றச்சாட்டுகள் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஆனால், விசாரணை மேற்கொள்வதற்கு பதிலாக தவறு செய்தவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். தமிழக வேட்பாளர் தேர்வு பார்த்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு தவறுகள் நடப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். நாட்டை பாஜக, மோடியிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இதில், எந்தவித சமரசமும் இன்றி தலைவர் ராகுல் காந்தி போராடி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 15 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்.. புதிய இல்லத்திற்கு குடியேற்றம்.. காரணம் என்ன?