34 ஆண்டுகால மருத்துவக் கனவு.. 51 வயதில் MBBS சீட் பெற்று சாதனை படைத்த நபர்!
51 year old MBBS student: கற்றலுக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 51 வயதான சுரேஷ்குமார், 34 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் (MBBS) படிப்பதற்கான சேர்க்கை ஆணையைப் பெற்று அசத்தியுள்ளார். இவரது விடாமுயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம், ஆகஸ்ட் 14: “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” மற்றும் “கற்றலுக்கு வயது ஒருபோதும் தடையில்லை” என்ற பொன்மொழிகளைத் தனது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார். தனது 17 வயதில் கண்ட மருத்துவக் கனவை நனவாக்க சுமார் 34 ஆண்டுகள் காத்திருந்து, 51 வயதில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். குடும்பச் சூழல், பொருளாதாரக் கடமைகள் மற்றும் உடல் ரீதியான சவால்கள் என பல தடைகள் வந்தபோதிலும், மருத்துவத்தின் மீதிருந்த தீராத ஆர்வத்தால் நீட் தேர்வெழுதி வெற்றிபெற்று பலருக்கும் சிறந்த ஊக்க மருந்தாகத் திகழ்கிறார்.
மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
34 ஆண்டுகால நீண்ட காத்திருப்பும் கல்வியும்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு தனது 12-ஆம் வகுப்புப் படிப்பை நிறைவு செய்தார். பள்ளிப் படிப்பை முடித்தபோதே மருத்துவராக வேண்டும் என்பதே இவரது முதன்மை ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. ஆனால், அப்போதைய சூழலில் இவருக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், தனது கல்விப் பயணத்தைக் கைவிடாத சுரேஷ்குமார், முதுகலைப் பட்டப்படிப்பு (PG) மற்றும் முனைவர் பட்டம் (Ph.D) வரை படித்து முடித்து, மருந்தக ஆய்வுத்துறையில் பணியாற்றி வந்தார். அத்துடன் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார்.
விபத்தும் தளராத லட்சியமும்:
கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு சுரேஷ்குமாருக்கு ஏற்பட்ட சில விபத்துகள் காரணமாக உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் மற்றும் சவால்கள் உருவாயின. இருப்பினும், மருத்துவம் பயில வேண்டும் என்ற லட்சிய நெருப்பு அவரிடம் குறையவே இல்லை. இதனிடையே நீட் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் வயது வரம்பை நீக்கியது இவருக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தன் மீதிருந்த நம்பிக்கையுடனும், குடும்பத்தின் முழு ஆதரவுடனும் நீட் தேர்வை எதிர்கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வில் தனது மனைவியுடன் பங்கேற்ற சுரேஷ்குமாருக்கு, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
பொதுமக்களின் நெகிழ்ச்சியான ஆதரவு:
கணவரின் இந்த சாதனை குறித்துப் பேசிய அவரது மனைவி, “பிளஸ் 2 முடித்தவுடன் எம்பிபிஎஸ் படிக்க முடியாத சூழலில், குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து வேலைக்குச் சென்று அனைத்துக் கடமைகளையும் முடித்தார். அதன்பின்னரும் மருத்துவப் படிப்பின் மீது அவருக்கு இருந்த காதல் குறையவில்லை. நான் ஆசிரியர் துறையில் இருப்பதால் அவர் தொடர்ந்து படிப்பதை எப்போதும் ஊக்குவிப்பேன்; 51 வயதில் அவர் எம்பிபிஎஸ் சேருவது எனக்குப் பெரும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். 51 வயதில் மருத்துவக் கல்லூரியில் காலடி வைக்கும் சுரேஷ்குமாருக்கு சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடையேயும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.