AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்.. மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் என்ன?

காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் 1 முதல் 448 வரை இடம்பெற்றுள்ள, நீட் தேர்வில் 599 முதல் 469 மதிப்பெண்கள் வரை பெற்ற 448 மாணவர்களுக்கும், மதியம் 12 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் 449 முதல் 912 வரை இடம்பெற்றுள்ள, நீட் தேர்வில் 468 முதல் 433 மதிப்பெண்கள் வரை பெற்ற 464 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்.. மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Aug 2026 09:53 AM IST

ஆகஸ்ட் 13, 2026: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று நேரடியாக நடைபெறுகிறது. தமிழகத்தில் 2026–27ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் கட்டமாக விளையாட்டுப் பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நேரடி முறையில் சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

மொத்தம் 72,633 விண்ணப்பங்கள்:

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் சார்பில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டன. மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவுக்கு 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் வாரிசுகள் பிரிவுக்கு 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மின் கட்டணம் தொடர்பாக சின்னத்திரை நடிகையின் பரபரப்பு புகார்.. மின்வாரியம் தொடர்பு கொண்டும் விவரங்கள் பகிர மறுப்பு..

அரசு ஒதுக்கீட்டின் கீழ் 35,926 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 12,551 மாணவர்களும், 23,375 மாணவிகளும் அடங்குவர். அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3,625 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 981 மாணவர்களும், 2,644 மாணவிகளும் அடங்குவர். சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 26,956 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் அடங்குவர்.

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு:

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெறும் சிறப்புப் பிரிவு கலந்தாய்வில், காலை 8 மணிக்கு விளையாட்டுப் பிரிவில் தரவரிசை எண் 1 முதல் 25 வரை இடம்பெற்றுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

காலை 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த தரவரிசை எண் 1 முதல் 30 வரை உள்ள மாணவர்களுக்கும், காலை 9 மணிக்கு தகுதி வாய்ந்த அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 537 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் 202 இடங்களும் உள்ளன.

அதேபோல், பிடிஎஸ் படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் காலை 10 மணிக்கு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு தொடங்குகிறது.

காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் 1 முதல் 448 வரை இடம்பெற்றுள்ள, நீட் தேர்வில் 599 முதல் 469 மதிப்பெண்கள் வரை பெற்ற 448 மாணவர்களுக்கும், மதியம் 12 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் 449 முதல் 912 வரை இடம்பெற்றுள்ள, நீட் தேர்வில் 468 முதல் 433 மதிப்பெண்கள் வரை பெற்ற 464 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இட ஒதுக்கீட்டின் கீழ் எஸ்சி பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 129 முதல் 156 வரை இடம்பெற்றவர்களுக்கும், எஸ்சிஏ பிரிவில் 21 முதல் 32 வரை இடம்பெற்ற மாணவர்களுக்கும், எஸ்டி பிரிவில் 7 முதல் 12 வரை இடம்பெற்ற மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் தனியாக அனுப்பப்படாது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருகை தர வேண்டும். மேலும், அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

மாணவர்கள் கொண்டு வர வேண்டிய முக்கிய ஆவணங்கள்:

  • நீட் யுஜி 2026 அனுமதி அட்டை மற்றும் மதிப்பெண் அட்டை.
  • 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
  • 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
  • 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதிக்கான மதிப்பெண் பட்டியல்.
  • தமிழ்நாடு அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்ததற்கான உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate). இது சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து (CEO) பெறப்பட்டிருக்க வேண்டும்.
  • கடைசியாகப் படித்த பள்ளியிலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்துக்கொண்டிருக்கும் பள்ளியிலிருந்து பெற்ற உண்மைச் சான்றிதழ்.
  • பிறப்புச் சான்றிதழ்.
  • சாதிச் சான்றிதழ்.
  • பெற்றோரில் ஒருவரின் சாதிச் சான்றிதழ் (தந்தை அல்லது தாய்).

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ இடம் கிடைக்கும் எனக் கூற முடியாது. மாணவர்கள் பெற்ற நீட் மதிப்பெண், தரவரிசை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் அனுமதிக்கப்படாது என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.

Follow Us