உத்தரகாண்ட் சுரங்கத்தில் தண்ணீர், மண் புகுந்து விபத்து.. 7 பேர் உயிரிழப்பு; 2 தொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்
இந்த விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அதிக அளவிலான தண்ணீர் மற்றும் சேறு கலந்த வெள்ளம் ஆற்றில் வேகமாக பாய்ந்து வந்து இரும்புப் பாலத்தின் மீது மோதுவது பதிவாகியுள்ளது. சில நொடிகளிலேயே வெள்ளத்தின் வேகத்தில் பாலம் வேரோடு பெயர்ந்து ஆற்றங்கரையை நோக்கி அடித்துச் செல்லப்பட்டது.
ஆகஸ்ட் 14, 2026: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சுரங்கத்துக்குள் தண்ணீர் மற்றும் மண் குப்பைகள் திடீரென புகுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமோலி மாவட்டம் பிபல்கோட்டியில் தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (THDC) சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணியில் மொத்தம் 22 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென அதிக அளவில் தண்ணீர் மற்றும் மண் குப்பைகள் சுரங்கத்துக்குள் புகுந்தன.
சுரங்கத்தில் தண்ணீர் மற்றும் குப்பை புகுந்ததால் விபத்து:
தண்ணீரின் வேகமான நீரோட்டத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலர் சுரங்கத்தின் வெளியேறும் பகுதியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து சமோலி மாவட்ட ஆட்சியர் கௌரவ் குமார் கூறுகையில், மாலை 6.30 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் சுரங்கத்துக்குள் அதிக அளவில் தண்ணீரும் மண் குப்பைகளும் திடீரென புகுந்ததாக தெரிவித்தார்.
7 பேர் உயிரிழந்த சூழலில் மீட்பு பணிகள் தீவிரம்:
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண் மற்றும் குப்பைகளை அகற்றி, சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: “காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு!”.. கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் கைது, எல்லை நிலவரம் என்ன?
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் லக்பத் பூடோலா கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம். முழு நிர்வாகக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்குவதே எங்களின் முன்னுரிமை” என்றார்.
மீட்பு பணிகளை வேகப்படுத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தல்:
#WATCH | Chief Minister’s Office- Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami has expressed deep concern over the incident of debris and water entering the THDC tunnel at Pipalkoti in Chamoli district and directed officials to conduct relief and rescue operations on a war… pic.twitter.com/DXhaSKhbUO
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 13, 2026
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும், மூத்த அதிகாரிகளிடம் இருந்து சம்பவம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த தொழிலாளர்களிடம் பேசியதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்கள் மற்றும் விபத்தில் சிக்கியவர்களில் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பது குறித்து அந்த மாநில முதலமைச்சர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளரிடமும் பேசியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: வடிவேலு ஸ்டைலில்… திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, நீரோட்டம் அதிகரித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை, நிதி பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், அதிக அளவிலான தண்ணீர் மற்றும் சேறு கலந்த வெள்ளம் ஆற்றில் வேகமாக பாய்ந்து வந்து இரும்புப் பாலத்தின் மீது மோதுவது பதிவாகியுள்ளது. சில நொடிகளிலேயே வெள்ளத்தின் வேகத்தில் பாலம் வேரோடு பெயர்ந்து ஆற்றங்கரையை நோக்கி அடித்துச் செல்லப்பட்டது.