நடுவானில் 300 அடி சரிந்த விமானம்.. போதைப்பொருளை பயன்படுத்திய விமானி – பரிசோதனையில் உறுதி
ம்பவத்துக்குப் பிறகு இரு விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. துணை விமானியின் பரிசோதனை முடிவு தெளிவாக இருந்த நிலையில், கேப்டன் இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது பரிசோதனையில் மரிஜுவானா (கஞ்சா) பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 12, 2026: புகெட்-டெல்லி இடையே சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் சரிந்த சம்பவத்தில், விமானத்தின் கேப்டன் புறப்படுவதற்கு முன்பே போதையில் இருந்ததாக பயணி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், சம்பவத்திற்குப் பிறகு பயணிகளை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என விமானி கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் AI-2379 விமானம் 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் ஆகஸ்ட் 4ஆம் தேதி புகெட்டில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. பயணத்தின் நடுவே விமானம் திடீரென 300 அடி உயரம் சரிந்ததில், குறைந்தது 20 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் காயமடைந்தனர்.
மது போதையில் விமானி – பயணிகள் பரபரப்பு குற்றச்சாட்டு:
தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய பயணி ஒருவர், தானும் தனது சகோதரரும் கடைசியாக விமானத்தில் ஏறியதாகவும், அப்போது விமானியும் தங்களுடன் விமானத்தில் ஏறியதாகவும் கூறினார். விமானத்திற்கான நேரம் குறித்து விமானியிடம் பேசியபோது, அவர் மெதுவாக பதிலளித்ததாகவும், அவரது கண்கள் சிவந்து காணப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனால் விமானி போதையில் இருப்பது போல் தெரிகிறது என தனது சகோதரரிடம் அப்போதே கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
விமானம் திடீரென கீழே சரிந்தபோது, பயணிகள் பலர் இருக்கைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், தனது சகோதரர் பலமுறை விமானத்தின் மேற்கூரையில் மோதியதாகவும் பயணி கூறினார். பலர் காயமடைந்து உதவி கோரி அலறியதாகவும் தெரிவித்தார்.
சம்பவத்திற்குப் பிறகு விமானி கேபினுக்கு வந்து பயணிகளை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும், “இதை பெரிதாக்கவேண்டாம் எனக் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்க அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறங்காமல் டெல்லிக்கே சென்றது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
விமான திடீரென கீழே சரிய என்ன காரணம்?
இதற்கிடையில், விமானப் பாதுகாப்புத் துறையின் அறிக்கையின்படி, விமானம் திடீரென ஸ்டால் நிலையை எதிர்கொண்டபோது ஆட்டோபைலட் துண்டிக்கப்பட்டது. அப்போது விமானத்தை இயக்கிய துணை விமானி, பயிற்சியின்படி விமானத்தின் மூக்குப் பகுதியை கீழ்நோக்கித் தள்ளி வேகத்தை அதிகரித்தார். இதனால் விமானம் சில நொடிகளுக்கு கடுமையான எதிர்மறை ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு, அதிகபட்சமாக 300 அடி உயரத்தை இழந்தது.
மேலும், மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்ததற்கான அறிகுறிகள், ஆட்டோபைலட் துண்டிப்பு மற்றும் எலிவேட்டர் கோளாறு பதிவாகியுள்ளன. இதனால் விமானத்தின் உயரக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருளை பயன்படுத்திய விமானி – பரிசோதனையில் உறுதி:
இதனிடையே, சம்பவத்துக்குப் பிறகு இரு விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது. துணை விமானியின் பரிசோதனை முடிவு தெளிவாக இருந்த நிலையில், கேப்டன் இரண்டு பரிசோதனைகளிலும் தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது பரிசோதனையில் மரிஜுவானா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு விமானிகளும் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!
இந்த சம்பவத்தை தீவிரமான விமானப் பாதுகாப்பு நிகழ்வாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வகைப்படுத்தியுள்ளது. விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB), ஏர்பஸ் மற்றும் பிரான்சின் BEA ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறது. அனைத்து தொழில்நுட்ப, செயல்பாட்டு, மருத்துவ மற்றும் மனிதக் காரணிகள் தொடர்பான ஆதாரங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.