சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Chennai property tax hike: சென்னையில் கடந்த சில நாட்களாக பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 3.5 லட்சம் பேருக்கான சொத்து வரி உயர்வை சென்னை மாநகராட்சி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 14: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கும் கடந்த சில தினங்களாக சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதாகக் கூறி கடும் அதிர்ச்சியும் எதிர்ப்பும் கிளம்பியது. வழக்கமாக செலுத்தப்படும் சொத்து வரியைக் காட்டிலும் 20 மடங்கு முதல் 30 மடங்கு வரை வரி உயர்த்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது குறித்து மாநகராட்சித் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், பொதுமக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இந்நிலையைத் தொடர்ந்து, பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, சொத்து மதிப்பீடு தொடர்பாக சுமார் 3.5 லட்சம் பேருக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: பிரம்மாண்டமாக உருவாகிறது முதல்வரின் புதிய அலுவலகம்.. ரூ. 5.5 கோடியில் டெண்டர் கோரிய பொதுப் பணித் துறை!
திடீர் வரி உயர்வும் பொதுமக்களின் எதிர்ப்பும்
சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக சொத்து வரி செலுத்துவோர் பலர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய வரி மதிப்பீட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. உதாரணமாக, முன்பு ரூ.900 செலுத்தி வந்தவருக்கு தற்பொழுது ரூ.2,300 ஆகவும், ரூ.365 ஆக இருந்த வரித் தொகை ஒரே அடியாக ரூ.7,525 ஆகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த திடீர் வரி உயர்வு தங்களது குடும்பப் வரவு செலவில் பெரும் சுமையை ஏற்படுத்துவதாகவும், நியாயமற்ற முறையில் வரி கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறி பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் அரங்கேறின.
மாநகராட்சியின் ஆரம்பக்கட்ட விளக்கம்:
பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு நேற்றைய தினம் விளக்கம் அளித்திருந்த சென்னை மாநகராட்சி, சொத்து மதிப்பீட்டின் அடிப்படையிலேயே சரியான முறையில் வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது. மேலும், இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருந்தால் சென்னை மாநகராட்சியின் மண்டல மற்றும் வட்டாரத் துணை ஆணையர் அலுவலகங்களில் முறையீடு செய்யலாம் என்றும் அறிவித்திருந்தது. இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து தீவிரப்படுத்தினர். மேலும், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவைப் பற்றி மாமன்றக் கூட்டத்தில் கலந்தாலோசிக்காமல் அமல்படுத்தியது தவறானது என்றும், உடனடியாக இந்த வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் திமுக தரப்பிலிருந்தும் அழுத்தமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிக்க : “ஏரியிலிருந்து மண் திருட்டு.. அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு!”.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அதிரடி புகார்.. லஞ்ச ஒழிப்புத் துறையில் முறையீடு!
3.5 லட்சம் பேருக்கு வரி உயர்வு நிறுத்தி வைப்பு:
சொத்து வரி உயர்வு தொடர்பான செய்திகளை தொடக்கத்தில் மறுத்துவந்த சென்னை மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களின் கொந்தளிப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து தனது நிலையை மாற்றிக்கொண்டது. சென்னை மாநகராட்சி பகுதியில் சுமார் 3.5 லட்சம் பேருக்கு சொத்து மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்து வரி கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன்பேரில், சொத்து மதிப்பீடு தொடர்பான புகார்கள் பரவலாக எழுந்ததைக் கருத்தில் கொண்டு, அந்த 3.5 லட்சம் பேருக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி தொடர்பான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.