“முன்னறிவிப்பின்றி 4 மடங்கு சொத்துவரி உயர்வு!”.. மாநகராட்சியின் விளக்கத்திற்கு ஆதாரங்களுடன் சென்னைவாசிகள் கொந்தளிப்பு!!
Chennai Property Tax Hike: சென்னையில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி அளித்த விளக்கத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர். முன்னறிவிப்பின்றி 300% முதல் 400% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தவறான மதிப்பீடு எனக் கூறி கடந்த அரையாண்டுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்து வசூலிப்பதற்கு மக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட் 13: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துக்களுக்கான சொத்துவரி கணிசமாக உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், சென்னையில் புதிதாகச் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை எனச் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆணையர் விளக்கம் அளித்திருந்தார்.
மாநகராட்சியின் இந்த அதிகாரப்பூர்வ மறுப்பு அறிக்கை பொதுமக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி வெளியிட்ட இந்த அறிவிப்பிற்குக் கீழே, தங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி ரசீதுகளை ஆதாரமாகப் பதிவிட்டு சென்னைவாசிகள் தங்களது பலத்த எதிர்ப்பையும் குமுறலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
தவறான மதிப்பீடு என்ற சாக்குப்போக்கு:
குறிப்பாக, மாநகராட்சி நிர்வாகம் “தவறான மதிப்பீடு” அல்லது “குறைந்த மதிப்பீடு” காரணத்தினாலேயே வரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறியதற்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இதற்கு முன் மாநகராட்சி அதிகாரிகளே நேரில் அளவெடுத்து நிர்ணயித்த கட்டணம் எப்படித் தவறாகும்? அதிகாரிகளின் தவறுக்குச் சாமானிய மக்களைப் பலிகடா ஆக்குவதா?” என அவர்கள் ஆவேசமாக வினவுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த உயர்வைக் கடந்த 6 மாதங்களுக்கு முந்தைய அரையாண்டிலிருந்தே கணக்கிட்டு, அதற்கான நிலுவைத் தொகையையும் சேர்த்துத் தற்போதைய ரசீதில் அனுப்பியிருப்பது மக்களை மேலும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.
ஆதாரங்களுடன் சென்னைவாசிகளின் குமுறல்:
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் எக்ஸ் தளப் பதிவிலேயே, ஆணையரின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலரும் தங்களது சொத்துவரி உயர்வு குறித்த ஆதாரப் படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர், தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சொத்திற்கு கடந்த அரை ஆண்டில் ரூ.4,800 சொத்துவரியாகச் செலுத்திய நிலையில், தற்போது அது ரூ.11,330 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், தனது 20 ஆண்டுகள் பழமையான சொத்திற்குத் திடீரெனச் சொத்துவரி பலமடங்கு உயர்ந்துள்ளதாகக் வேதனை தெரிவித்துள்ளார். இதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் 30 சதவீதம் முதல் 400 சதவீதம் (4 மடங்கு) வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கண்டனம்:
தவறான மதிப்பீட்டால் தான் சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் தவறுக்காகவும் அலட்சியத்திற்காகவும் சாமானிய மக்களைப் பலிகடா ஆக்குவதா என்று சமூக வலைத்தளங்களில் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு சில்லென மாறப்போகும் தமிழகம்.. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..
சொத்துவரி உயர்வு விவகாரத்தில் உண்மை நிலையை மறைத்து மாநகராட்சி நிர்வாகமே பொய் சொல்லலாமா என்றும், உயர்த்தப்பட்ட வரியைக் குறைத்து முறையான ஆய்வுக்குப் பிறகே வரியை நிர்ணயிக்க வேண்டும் என்றும் சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.